கூட்டமைப்பின் பேச்சாளர் விவகாரம்: தமிழ் அரசு கட்சிக்கு 10 நாள் அவகாசம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் விவகாரத்தில், இலங்கை தமிழ் அரசு கட்சி தனது இறுதி நிலைப்பாட்டை தெரிவிக்க 10 நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பங்காளிக்கட்சிகள் இரண்டின் சார்பாகவும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று முன்தினம் (9) திடீரென நேரில் சந்தித்து நடத்திய கலந்துரையாடலில், இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.

சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பு, இம்முறை பங்காளிக்கட்சியொன்றிற்கு வழங்கப்பட வேண்டும். அதுவே கூட்டணி நீதியும், நியாயமுமாகுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ வலியுறுத்தி வருகின்றன. இன்னொரு பங்காளிக்கட்சியான தமிழ் அரசு கட்சியின் பெரும்பாலானவர்கள் விருப்பமும் அதுவே. எனினும், எம்.ஏ.சுமந்திரன் குழு அதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமக்கு முக்கிய பொறுப்பளிக்கப்பட வேண்டுமென அவர்கள் வெளிப்படையாகவே கேட்டு, கடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர். எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் ஆகியோரே குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (9) இரவு கொழும்பில் திடீரென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

இதன்போது பங்காளிக்கட்சிகள் இரண்டின் சார்பிலும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுகையில், பேச்சாளர் விவகாரத்தில் தமிழ் அரசு கட்சிக்குள் பேசி இறுதியான நிலைப்பாட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு சொல்லுங்கள். உங்கள் முடிவை பொறுத்து அடுத்து என்ன செய்வதென நாம் சிந்திப்போம் என நேரில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்குள் புளொட், ரெலோ இரண்டும் கூட்டாக- சுயாதீனமாக இயங்கப் போகிறோம் என்பதை அவர் சூசகமாக குறிப்பிட்டதாக கருதப்படுகிறது.

செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவித்த பின்னர், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா இருவரும்- பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனே நியமிக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

இரா.சம்பந்தன் குறிப்பிடுகையில்- கூட்டமைப்பிற்கு அடுத்த பேச்சாளர் நியமிக்கப்படுவதெனில் அது செல்வம் அடைக்கலநாதன் தான். அதில் நான் உறுதியாக உள்ளேன். எனினும், இப்பொழுது சிலர் குழப்பத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் எல்லோருமே புதியவர்கள். செல்வம் அடைக்கலநாதன் நீண்டகாலமாக தமிழ் அரசியலில் உள்ளார். அதனடிப்படையில் அவருக்குத்தான் அந்த பொறுப்பை வழங்க வேண்டும். செல்வத்தை நியமித்தால் மன்னாரில் அவர் முக்கியத்துவம் பெற்றுவிடுவார் என சாள்ஸ் நினைக்கிறார். சிறிதரனிற்கும், சுமந்திரனுக்கும் பல கனவுகள் உள்ளது போல தெரிகிறது. புதிதாக- நாம் எம்.பி பதவிகளை வழங்கிய சாணக்கியனும், கலையரசனும் எனது முடிவை- விருப்பத்தை சொன்ன பின்னரும் எதிர்த்து குழப்பத்தில் ஈடுபடுகிறார்கள்.

தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் பதவி வேண்டுமென இப்படி சண்டைபிடித்த வரலாறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் நாம் புதிதாக அரசியலுக்கு அழைத்து வந்தவர்கள், அதற்கு நேர்மாறாக செயற்படுகிறார்கள் என நீண்டநேரமாக தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட செல்வம் அடைக்கலநாதன் நகைச்சுவையாக, “ஐயா, இததை உங்கள் கட்சி ஆட்களை அழைத்து வைத்திருந்தபடியல்லவா சொல்ல வேண்டும். எமக்கு ஏன் சொல்கிறீர்கள்“ என கேட்டுள்ளார்.

இதையடுத்த, தமிழ் அரசு கட்சிக்குள் கலந்துரையாடல் நடத்தி, 20ஆம் திகதிக்கு முன்னதாக தமது முடிவை தெரிவிப்பதாக, இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here