பதுளை நீதிமன்றத்திலிருந்த கைத்துப்பாக்கியை விற்க முயன்ற நீதிமன்ற பணியாளர் கைது!

பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் தோட்டக்களை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹர்தமுல்ல பகுதியைச் சேர்ந்நத 37 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்து வரும் நபரெனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றையே இவ்வாறு விற்பனை செய்யமுற்பட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் அதன் 6 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here