நடிகர் சூரியிடம் பணமோசடி: நடிகர் விஷ்ணு விசாலின் தந்தை, திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்குபதிவு!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யுமான ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது காமெடி நடிகர் சூரி நிலமோசடி புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் சூரி, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் இடம் வாங்க திட்டமிட்டிருக்கிறார். அப்போது அவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் இடம் வாங்கவிருக்கும் தகவலை விஷ்ணு விஷாலிடம் சூரி கூறியிருக்கிறார். உடனே விஷ்ணு விஷால், தன்னுடைய தந்தையான ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷிடம் நடிகர் சூரி இடம் வாங்கும் விவரத்தைக் கூறியிருக்கிறார். இதையடுத்து ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனை நடிகர் சூரிக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மூன்று பேரும் சேர்ந்து நிலம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது சிறுசேரியில் ஒரு ஏக்கர் 82 சென்ட் உள்ள இடத்தை அன்பு வேல்ராஜன் நடிகர் சூரிக்கு காண்பித்திருக்கிறார். பின்னர், அந்த இடத்தை ரூ.5.75 கோடி ரூபாய்க்குப் பேசி முடித்திருக்கிறார்கள். பணத்தைக் கொடுத்ததும் சிறுசேரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. நடிகர் சூரிக்கு விற்கப்பட்ட இடத்துக்குப் பாதை இல்லை என்று கூறப்படுகிறது. அது குறித்து இடத்தை விற்றவர்களிடம் சூரி முறையிட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் அந்த இடத்துக்குப் பாதை வரவிருப்பதாகவும், வருங்காலத்தில் நல்ல விலைக்கு அந்த இடம் போகும் என்றும் கூறியிருக்கிறார்கள். சில ஆண்டுகள் கடந்த பிறகும் சூரி வாங்கிய இடத்துக்குப் பாதை கிடைக்கவில்லை.

அதனால் நடிகர் சூரி, சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., அவரின் மகனான நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரிடம் முறையிட்டிருக்கிறார். அந்த இடத்தை நாங்களே வாங்கிக்கொள்கிறோம் என்று கூறிய அந்தத் தரப்பு, அதற்காக சினிமா தயாரிப்பாளர் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தாகத் தெரிகிறது. அதற்கான ஒப்பந்தத்தையும் நடிகர் சூரிக்கு அந்தத் தரப்பு போட்டுக் கொடுத்தது. அதில் 2.75 கோடி ரூபாயை இடத்துக்கும் மீதமுள்ள தொகை 3 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகவும் கொடுப்பதாகக் கூறியிருக்கிறது. பணம் கிடைத்தால் போதும் என நடிகர் சூரி தரப்பு ஒப்பந்தத்துக்கு ஓகே செய்திருக்கிறது. ஆனால், பணத்தைக் கொடுக்காமல் அந்தத் தரப்பு ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வந்திருக்கிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி., கடந்த 2018ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறார். அப்போது, நடிகர் சூரி தரப்பு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் 50 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு நடிகர் சூரிக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதனால் நடிகர் சூரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்தார். ஓய்வுபெற்ற டி.ஜி.பி மீதே குற்றம் சாட்டப்பட்டதால் புகார் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து நடிகர் சூரி தரப்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சூரியின் புகாரின் பேரில் செப்டம்பர் 25ஆம் திகதி ஓர் உத்தரவு பிறப்பித்தனர். அதில், `சம்பந்தப்பட்டவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து ஒக்டோபர் 28ஆம் திகதிக்குள் ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரியை ஏமாற்றியதாக ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நிலத்தின் மதிப்பு கோடி ரூபாயைத் தாண்டுவதால் அடையாறு காவல் நிலையத்திலிருந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படவிருக்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் தரப்பும் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.

இது குறித்து அடையாறு சரக போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, `நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு (நிலமோசடி) போலீஸார் விசாரணை செய்வார்கள்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here