முதலமைச்சர் பந்தயத்தில் குதித்தார் சிறிதரன்: ரெலோவின் ‘பிளான் B’!

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யாரென்ற போட்டியில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புதியதொரு திருப்பமாக- முயற்சியாக- கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் களமிறக்கப்பட்டுள்ளார். மாவை சேனாதிராசாவிற்கு பதிலாகவே சிறிதரனை களமிறக்கும் முயற்சியில் ரெலோ தரப்பு மிகமிக இரகசியமாக ஈடுபட்டுள்ளதை ஆரம்பத்திலேயே தமிழ்பக்கம் மோப்பம் பிடித்து விட்டது.

மிகமிக இரகசியமாக, ரெலோவின் உயர்மட்ட உறுப்பினர்கள் மூவரும், சிறிதரனும் மட்டுமே இந்த இரகசிய நகர்வில் இறங்கியிருந்தனர்.

ரெலோவிற்குள் நடக்குள் உள்வீட்டு விவகாரங்களை தமிழ்பக்கம் விலாவாரியாக எழுதிவிடுகிறது என்ற காரணத்தால், அண்மைய வாரங்களில் ரெலோவின் அரசியல்குழுவோ, தலைமைக்குழுவோ கூட்டப்படவில்லை. உள்வீட்டு விவகாரங்கள் வெளியில் கசிவதால், இப்போதைக்கு இந்த கூட்டங்களை கூட்டி, முக்கிய விவகாரங்களை ஆலோசிக்க முடியாது என கட்சி தலைமை நேரடியாகவே சொல்லிவிட்டது.

இதனால் சிறிதரனை களமிறக்கும் முடிவை மேற்படி குழுக்களில் ஆலோசிக்காமல் ரெலோவின் உயர்மட்ட உறுப்பினர்கள் மூவர் மாத்திரமே சிறிதரனை களமிறக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர்.

ரெலோ செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா சில நாட்களின் முன்னர் நல்லூரிலுள்ள சி.சிறிதரனின் வீட்டுக்கு நேரில் சென்று இது குறித்து உரையாடினார். “மாவை சேனாதிராசா கவர்ச்சிகரமான வேட்பாளர் இல்லை. விக்னேஸ்வரனை எதிர்த்து வெற்றிபெற அவரால் முடியாது. மாவையை களமிறக்கினால் கூட்டமைப்பில் ரெலோ, புளொட் நீடிக்க வாய்ப்பில்லை. ரெலோவிற்குள் பெரும்பான்மையானவர்கள் விக்கியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பிரதான காரணம்- மாவை வெற்றி வேட்பாளர் இல்லையென்பதே. விக்கியுடன் செல்வதற்கு நாம் விரும்பவில்லை. அதனால் ஒரு மாற்று முயற்சியில் இறங்கியுள்ளோம். நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது, கூட்டமைப்பு ஒரு அணியாக தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும்“ என கூறியுள்ளார்.

“முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இம்முறையில்லாவிட்டாலும் அடுத்த முறையாவது களமிறங்கும் திட்டம் என்னிடமுள்ளது. ஆனால் இம்முறை நானாக களமிறங்க முடியாது. கூட்டமைப்பு தலைமையை நீங்கள் சம்மதிக்க வைத்தால் நான் களமிறங்குவேன்“ என அதற்கான முழு பொறுப்பையும் ரெலோவிடமே சிறிதரன் கொடுத்திருந்தார்.

இந்த சந்திப்பு முடிந்த அடுத்த நாள், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி மூலம் இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

சி.சிறிதரனை மாகாணசபை தேர்தலிற்குள் கொண்டு வந்தால், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகும், அந்த இடத்திற்கு ரெலோவின் ஒருவரை தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கலாம் என்ற அடிப்படையிலும் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கலாம்.

எனினும், தமிழரசுக்கட்சிக்குள் எவரும் இந்த நகர்வை அறிந்திருக்கவில்லையென்பதை தமிழ்பக்கம் உறுதிசெய்துள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளராக முதலமைச்சர் விக்னேஸ்வரனே களமிறங்க வேண்டுமென ரெலோ ஏற்கனவே ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமநேரத்தில் “பிளான் B“ ஆக இந்த திட்டத்தையும் ரெலோ முன்னகர்த்த ஆரம்பித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here