நீளக்கயிற்றில் ச.பவன்: உள்வீட்டு சிக்கல் நிதியமைச்சு வரை போனது!

அரசாங்கம் அறிமுகப்படுத்திய கம்பெரலிய திட்டத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சிக்குள் பெரும் முறுகல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. குறிப்பாக, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சவணபவன், வாக்கை குறிவைத்து எல்லா தொகுதிக்குள்ளும் மூக்கை நுழைக்க முயற்சிப்பது பெரும் முறுகலை ஏற்படுத்தியுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

கடந்த சில தினங்களின் முன்னர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் இது தொடர்பில் வந்த முறைப்பாடுகளை, அவர் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்துள்ளார்.

நல்லூர் தொகுதியின் தமிழரசுக்கட்சி கிளை தலைவராக சீ.வீ.கே. சிவஞானம் இருக்கிறார். எனினும், அவரை தவிர்த்தே, அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை சரவணபவன் பெற்று வருகிறார். நல்லூர் தொகுதிக்குட்பட்ட மக்கள் என ஒரு தொகுதியினரை அண்மையில் தனது வீட்டிற்கு அழைத்து சரவணபவன் கூட்டம் நடத்தியிருந்தார். இந்த கூட்டத்திற்கு  சீ.வீ.கே. சிவஞானம் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

விவகாரம் மாவை சேனாதிராசா வரை சென்ற பின்னர், தனது ஒதுக்கீட்டுக்குள் நல்லூர் பரிந்துரைகளை இணைப்பதாக கூறிய மாவை சேனாதிராசா, சீ.வீ.கே யிடமிருந்து பரிந்துரைகளை கோரியிருந்தார். இதற்கிணங்க, அவரும் பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.

நல்லூர், உடுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய் என்பன தனது பிரதேசங்கள், இதில் எப்படி சீ.வீ.கே பரிந்துரை செய்யலாமென கொதித்த சரவணபவன், தொலைபேசியில் அவைத்தலைவரை அழைத்து காரசாரமாக வாக்குவாதப்பட்டார்.

இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் தொகுதிகளிற்குள்ளும் ச.பவன் இந்த கூட்டங்களை நடத்தியிருந்தார். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக, தென்மராட்சி பிரதேச முன்மொழிவுகளையும் சரவணபவன் தரப்பினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், கட்சியின் தலைவர்களிடம் விடயத்தை தெரிவித்து, அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, தமிழரசுக்கட்சியின் உயர்மட்டத்தால் நிதியமைச்சுடன் பேசி, சரவணபவன் முன்வைத்த தென்மராட்சி பரிந்துரைகள் இரத்து செய்யப்பட்டதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here