ருவன் வெலிசாயவில் பதவியேற்பு நடக்கலாம்; வெடுக்குநாறியில் தமிழர்கள் வழிபட முடியாதா?: ஆலய நிர்வாகத்தை பிணையில் விடுவித்தது நீதிமன்றம்!

வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிசாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டது.

எனினும் ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கும், பூசை வழிபாடுகளை முன்னெடுப்பதற்கும் நெடுங்கேணி பொலிசாரால் தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டு வந்தது. கடந்தவாரம் ஆலயத்தின் பூசாரியை நெடுங்கேணி பொலிசார் விசாரணைக்காக அழைத்ததுடன், ஆலய வளாகத்திற்குள் சென்று பூசை நிகழ்வுகளை மேற்கொண்டால் கைதுசெய்வோம் என தெரிவித்திருந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பொலிசார் ஆலய நிர்வாகத்தினரை கைதுசெய்ய வேண்டும் என்றும், தொல்பொருள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்றும் நீதவானிடம் கோரப்பட்டது.

இதற்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. தெற்கிலும் ருவன் வெலிசாய போன்ற பல்வேறு பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழேதான் இருக்கிறது, எனினும் அங்கும் வழிபாடுகள் இடம்பெறுகின்றமை, மற்றும் அரச நிகழ்வுகள் தொல்லியல் முக்கியமிக்க இடங்களில் இடம்பெறுவதையும் நீதவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் நிமித்தம் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் ஆலய நிர்வாகத்தினர் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விடயத்திற்கு நீதிமன்றங்களின் ஊடாக தீர்வினை பெறுவது என்பது கல்லிலே நார் உரிப்பதற்கு ஒப்பானது. இவற்றிற்கு அரசியல் ரீதியாகவே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிடம்தெரிவித்தார்.

ஆலயத்தின் நிர்வாகத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சிற்றம்பலம் தலைமையில் 15 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here