மகளின் மருத்துவ கட்டணத்திற்காக உள்ளாடைக்குள் போதைவஸ்து கடத்திய விமானப் பணிப்பெண்!

தனது மகளின் மருத்துவ கட்டணங்களுக்காக பணம் சேர்ப்பதற்காக தனது மார்புக்கச்சை மற்றும் உள்ளாடைகளிற்குள் ஹெரோயின் கடத்திய விமானப் பணிப்பெண் ஒருவர் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த ஜெய்லி ஹனா ஜைனல் (40) தனது உள்ளாடைகளில் 20 தடவைகளுக்கு மேல் போதைப்பொருட்களை மறைத்துக் கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர் நீண்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார். உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்துவதற்கு வசதியாக, அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது தனது தொடைகளுக்கு இடையில் மணல் நிரப்பப்பட்ட பொதியுடன் நம்பிக்கையுடன் நடக்க மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்ததாக கூறினார்.

போதைப்பொருளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் சென்று, மில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபட்ட வலையமைப்பில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இருப்பினும் நீதிபதி மைக்கேல் காஹில், விமானப் பணிப்பெண் குற்றம் செய்ய காரணமாக அமைந்த பின்னணி காரணிகளில் கவனம் செலுத்தி, அவரது தண்டனையை மென்மையாக்க தகுதியுடையவர் என்றார்.

ஜைனலின் மகள் மியாவுக்கு பிறப்பிலிருந்தே அசாதாரண நிலைமையிருந்தது. அவளுக்கு ஒரு வயதுக்கு முன்பே மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. இப்போது ஒன்பது வயதான சிறுமிக்கு இன்னும் தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுகிறது.

மகளின் மருத்துவ தேவைக்கு நிதி திரட்ட முடியாமல் திண்டாடிய ஜெய்லி ஹனா ஜைனல், கடைசி முயற்சியாக குற்ற வாழ்க்கைக்கு திரும்பினார்.

போதைப்பொருள் விற்பனையின் முன்னர் கேக் வகை உள்ளிட்டவற்றை விற்பனை செய்தார். அப்போது- 2018 மார்ச்சில் அவர்களை ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் அணுகியது.

நீதிபதி காஹில், குண்டர்கள் “அவளது பாதிப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்” என்றார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கல் டிரான் என்பவரால் இந்த போதைப்பொருள் வலையமைப்பு இயக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு, குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனைக்கு காத்திருக்கிறார்.

மலேசியாவில் ஹெரோயின் சேகரித்தல் மற்றும் விமானப் பெண்ணாக ஹெரோயினை கடத்தி வரும் பணிகள் ஜைனலுக்கு வழங்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்படும் ஹெரோயினை, பொதுக்கழிப்பறைகளில் இரகசியமாக சந்தித்து டிரான் அல்லது இன்னொருவர் பெற்றுக்கொள்வார்.

ஜெய்லி ஹனா ஜைனல் மலேசியா திரும்பியதும், தனக்குரிய பணத்தை பெற்றுக்கொள்வார். பணம் கிடைத்த பின்னரே, அடுத்த முறை கடத்தலில் ஈடுபடுவார்.

வீடியோலிங்க் வழியாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது பதட்டமாக இருந்த ஜைனல் தனது வழக்கறிஞரிடம் “இது இதுதான்” என்று பலமுறை முணுமுணுத்தார்.

விமான பயணிகளிற்கு பாதுகாப்பு விளக்கங்கள் அளிப்பது, பானங்கள் வழங்குவது ஜெய்லி ஹனா ஜைனலின் பணி. ஒவ்வொரு முறை செல்லும்போதும் போதைப்பொருள் கொண்டு செல்ல சம்மதித்தார்.

ஜனவரி 6, 2019 அன்று அவுஸ்திரேலிய எல்லைப் படையால் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜைனல் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்த மருந்துகள் என்ன செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. சிறையில் இருந்ததிலிருந்து மருந்துகள் மக்கள் மீது ஏற்படுத்தும் பயங்கரமான விளைவை நான் கண்டேன். நான் மிகவும் வருந்துகிறேன்.” என குறிப்பிட்டார்.

பொதிகளில் ஹெரோயின் இருப்பது தனக்குத் தெரியாது என்று ஜைனல் கூறினார். ஆனால் தனது நடத்தை சட்டவிரோதமானது என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார் என்று நீதிபதி கூறினார்.

நீதிபதி காஹில், “நீங்கள் எல்லையை கடந்து போதைப்பொருளை எடுத்துச் செல்வதை நீங்கள் அறிவீர்கள், மெல்போர்னில் உள்ள நபர்கள் நூறாயிரக்கணக்கான டொலர்களை செலுத்துகிறார்கள். நாடுகடந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் நீங்கள் மிகவும் அதிநவீன  கூரியராக பணியாற்றினீர்கள்” என்றார்.

நீதிபதி காஹில், ஒன்பது வயதான மியா உட்பட ஜைனலின் பிள்ளைகளை, ஜைனல் தண்டனை அனுபவிக்கும் போது அவரது சகோதரியால் கவனிக்கப்படுவார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here