பொலிஸ் அதிகாரியை கடத்திக் கொன்றார் கஜேந்திரன்… தமிழ் கட்சிகளை பலவீனப்படுத்தும் உடன்படிக்கையுடனே நாடு திரும்பினார்: டக்ளஸ் அடுத்த ‘வெடி’!

தியாகி திலீபன் கொலைகாரன் என கதையை அவிழ்த்து விட்ட டக்ளஸ் தேவானந்தா, தற்போது அடுத்த கதையை அவிழ்த்து விட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தினார்.

பொலிஸ் அதிகாரியொருவரை சமாதானம் பேசுவதாக குறிப்பிட்டு, சூட்சுமமாக அழைத்து சென்று கொலை செய்ததாக தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று(08) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த கதையை அவிழ்த்து விட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், தனது பெயரையும், தனது கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு, தவறான – அதாவது ஏற்கனவே இத்தகையவர்களால் காலங்காலமாக கூறப்பட்டு, அவற்றில் எவ்விதமான உண்மைகளும் இல்லை என சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சில அபாண்டமான விமர்சனங்களை மீண்டும் முன்வைத்துள்ளார்.

யுத்தம் நிலவிய காலத்தில், வடக்கிலிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு 40 ஆயிரம் சவப் பெட்டிகளை அனுப்பி வைக்குமாறு இந்த சபையிலே கூவிவிட்டு, எமது மக்களை பலிக்கடாக்களாக்கிவிட்டு, எமது மக்களுக்கு பயனில்லாத தாம் சார்ந்த கூட்டம் தோல்வியைத் தழுவும் என்பதை அறிந்து, முன்கூட்டியே வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.

இங்கே மக்கள் அவலங்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கையில், வெளிநாட்டில் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களைக் காட்டிக் கொடுப்பதற்கும், தான் ஆரம்பத்தில் நாடாளுமன்ற வந்திருந்த கூட்டுக் கட்சிகளை பலவீனப்படுத்துவதற்குமான இரகசிய வாக்குறுதியை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே இலங்கை திரும்பிய இவர், காட்டிக் கொடுப்பது பற்றி கதைப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கின்றது.

புலித் தலைமையினது கள்ள வாக்கு ஒத்துழைப்பினால் யுத்தம் நிலவிய காலகட்டத்தில் நாடாளுமன்றம் வந்த இவரை, அடுத்தடுத்த பொதுத் தேர்தலில் எமது மக்கள் துரத்தியடித்தனர்.

தற்போதுகூட தேசிய பட்டியலில் தொங்கிக் கொண்டு வந்துவிட்டு, மீண்டும் பழைய ஊளைகளை இட்டுக் கொண்டு, அனைத்துத் தரப்பினராலும் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

யுத்த காலத்தின் இடைநடுவில் சமாதான ஒப்பந்தம் நிலவியபோது, எமது மக்களிடையே நல்ல பெயரைச் சம்பாதிருந்திருந்த ஒரு பொலிஸ் அதிகாரியை சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்று கழுத்தறுத்து கொலை செய்ததில் முன்னின்ற இவரைப் போல் நாங்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை – செயற்படப் போவதுமில்லை.

இரத்தக் கறைபடிந்த இவரது கொலை, கொள்ளை, நிதி மோசடிகள் தொடர்பில் இவரது கட்சியின் தேசிய அமைப்பாளர் இப்போது பகிரங்கமாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

சமாதான காலப்பகுதியில் பொலிஸ் அதிகாரியொருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டதாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தியாகி திலீபன் விவகாரம் போல இதுவும் அவதூறாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here