முகக்கவசமில்லாவிட்டால் பேருந்துகளிலிருந்து இறக்கப்படுவார்கள்… தனியார் கல்வி நிலையங்கள் பூட்டு: முல்லைத்தீவில் அதிரடி உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ்சினுடைய அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர்கள், பொதுப்போக்குவரத்து சம்பந்தமான தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.

இங்கு கொரோனா வைரஸ் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கம்பஹா மாவடடத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு வருகை தந்த வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரும், சுகாதார திணைக்கள ஊழியர் ஒருவருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனைவிட கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த ஒரு தொகுதியினர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதுவரை மாவட்டத்தில் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் மக்கள் விழிப்புணர்வுடன் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதனூடாக எமது மாவட்டத்தில் இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளமுடியும் எனவும் மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறும் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் தனியார் கல்விநிலையங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டு. இதுதொடர்பில் கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அண்மைய நாட்களாக கடல் மார்க்கமாக இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் வருகை அதிகரித்திருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இதுதொடர்பில் கடற்படையினருக்கு உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தார்.

அதனைவிட பொது போக்குவரத்திலீடுபடும் பேருந்துகளில் முகக்கவசம் அணியாத பயணிகளை ஏற்றவேண்டாம் எனவும், ஆசனங்களை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார நடைமுறைகளை பேணுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைவிட வெளியிடங்களுக்கு கடலுணவுகளை ஏற்றி செல்பவர்கள் கொள்வனவுக்காக இதர தேவைகளுக்காக சென்று வருபவர்கள் மிக அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட உத்தரவிடுமாறு துறை சார் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைவிட மக்கள் ஒன்றுகூடும் இடங்களை நிகழ்வுகளை முடிந்தளவு கட்டுப்படுத்தி சுகாதார நடைமுறைகளை பேணி நடப்பதற்கு ஏற்றவகையில் ஆலோசனைகளை வழங்குமாறும் பிரதேச சபைகளின் சந்தையையும் விரிவுபடுத்தி மக்கள் ஒன்றுகூடாதவாறு கடந்த காலங்களை போன்று சந்தை வளாகத்துக்கு வெளியே விஸ்தரிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், பொதுமக்களிடம் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் அதனூடாக எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here