நமக்கு வாய்த்த எம்.பிக்கள்: இரா.சம்பந்தனே கதறல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இன்று கைகலப்பு இடம்பெறாத குறையாக நடந்து முடிந்தது. தனக்கு கட்சிக்குள் பெரிய பதவி தேவையென சிறிதரன் வலியுறுத்த, தனது அணியை சேர்ந்த சிறிதரனிற்கு பதவியை வழங்குங்கள் என சுமந்திரன் வலியுறுத்த, கூட்டமைப்பின் கூட்டத்தில் களேபரம் ஏற்பட்டது.

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பில் செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதென, கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்திருந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரன் அணி அதில் குழப்பம் ஏற்படுத்த இரகசியமாக திட்டமிட்டு வந்ததை தமிழ் பக்கம் சில வாரங்களின் முன்னர் வெளிப்படுத்தியது.

சிறிதரனிற்கு பேச்சாளர் பதவியை கோருவதென அந்த அணி தீர்மானித்திருந்தது. இதன்பின், தமிழ் அரசு கட்சியின் ஏனைய எம்.பிக்களிடம் ஆதரவு கோரி, சிறிதரன் இரகசிய பேச்சில் ஈடுபட்டு வந்தார்.

சிறிதரன் தரப்பு இரகசிய பேச்சு நடத்தியபோது, செல்வம் அடைக்கலநாதனிற்கு பேச்சாளர் பொறுப்பு வழங்கப்பட்டால், மாவட்டத்தில் அவர் பிரபலமடைந்து விடுவார் என கூறியிருந்தார். இதை நம்பிய சாள்ஸ், சிறிதரனை ஆதரிப்பதாக வாக்களித்திருந்தார்.

பேச்சாளர் தெரிவில் குழப்பத்தை ஏற்படுத்துவதென முன்னரே திட்டமிட்டே அந்த அணி இன்று வந்தது.

இந்த நிலையில், இன்ற பேச்சாளர் விவகாரம் ஆராயப்பட்டது. இதன்போது, சாள்ஸ் நிர்மலநாதன் பேசும்போது, செல்வம் அடைக்கலநாதன் பேச்சாளர் ஆகுவதை தான் ஆதரிக்கமாட்டேன் என்றார்.

அதற்கு அவர் கூறிய காரணம்தான் முக்கியமானது. நமது எம்.பிக்களின் தராதரத்தை உணர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இப்படி அரிதாகவே ஏற்படும்.

“மன்னார் நகரசபை நிர்வாகம் எனக்கு கட்டுப்படுவதில்லை. நான் சொன்னால் அவர்கள் எதையும் கேட்பதில்லை. அதனால் நான் செல்வம் அடைக்கலநாதனை ஆதரிக்க மாட்டேன்“ என்றார்.

இதைக் கேட்ட இரா.சம்பந்தனும் சிரித்தார்.

தேர்தல் காலத்தில் எம்.ஏ.சுமந்திரன் மீது கடுமையான விமர்சனத்தை சாள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டார். தேர்தலின் பின்னர், எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கட்சி தலைமைக்கு அறிவித்திருந்தார்.

இன்று தனக்கு எதிராக கருத்து சொன்னவர்கள் என சில எம்.பிக்களின் பெயரை எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அதில் சாள்ஸின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சுமந்திரன் கலந்து கொள்ளும் கூட்டத்திலேயே கலந்து கொள்ள மாட்டேன் என வீராப்பு காட்டிய சாள்ஸ் இன்று, சுமந்திரனின் தெரிவை ஆதரித்தார். திரை மறைவு இணக்கங்களை இது அம்பலப்படுத்தியது.

சாள்ஸ் நிர்மலநாதன் இப்படி கருத்து தெரிவித்த பின்னர், மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் ஒரு கருத்தை சொன்னார். அது மகா காமெடியானது.

செல்வம் அடைக்கலநாதனை ஆதரிக்க முடியாது என சாணக்கியன் தெரிவித்தார். “ போரதீவுப்பற்று- வெல்லாவெளி பிரதேச சபையின் தவசாளராக ரெலோவை சேர்ந்தவர் உள்ளார். அங்கு எனக்கு தெரிந்த ஒருவர் பிக்அப் சாரதியாக இருந்தார். அவரது வேலை மாற்றப்பட்டு, அவர் ட்ரக்டர் சாரதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து செல்வம் அடைக்கலநாதனை ஆதரிக்கவில்லை“ என்றார்.

செல்வம் அடைக்கலநாதனை எதிர்ப்பது என முன்னரே தீட்டப்பட்ட இரகசிய திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்ட எம்.பிக்கள், அதற்கு என்ன காரணம் சொல்வது என தெரியாமல்- கொள்கைரீதியிலான காரணங்கள் எதுவும் சிக்காமல்- சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை தெரிவித்தனர்.

சாணக்கியன் பேசியதும், இரா.சம்பந்தன் மிக சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டதுடன், கூட்டத்தை ஒத்திவைத்தார்.

நமக்கு வாய்த்த எம்.பிக்கள் எப்படியானவர்கள் என அவர் யோசித்திருக்க கூடும்!


தமிழ் பக்கத்தின் செய்திகளை ஜே.வி.பி, தமிழ் வின் உள்ளிட்ட பல இணையங்கள் மீள் பிரசுரம் செய்வது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here