விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியின் பணியிடத்தில் புகுந்து கத்தியால் குத்திய கணவன்: பரபரப்பு காட்சிகள்!

நாகர்கோவிலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை அவருடைய கணவர் கத்தியால் குத்திய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் திருமலைபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் பெருமாள் (32). இவருடைய மனைவி ஜோஷி (28). கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜோஷி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் பெருமாள் நேற்று முன்தினம் மாலை ஜோஷி வேலை பார்க்கும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உள்ள அனிமேஷன் சென்டருக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சதீஷ் பெருமாள் அவருடைய மனைவியை கத்தியால் குத்திய காட்சி அனிமேஷன் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவில் ஜோஷி தன் அறையில் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். சதீஷ் பெருமாள் உள்ளே வந்து நின்றபடி அவருடன் பேசுகிறார். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோஷியின் வயிற்று பகுதியில் ஆவேசத்துடன் சரமாரியாக குத்துகிறார்.

இதில் ஜோஷி கீழே விழுந்து அலறுகிறார். உடனே சக பணியாளர்கள் ஓடி வந்து சதீஷ் பெருமாளை பிடித்து இழுத்து ஜோஷியை காப்பாற்றுகின்றனர். பின்னர் ஜோஷி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே காயம் அடைந்த ஜோஷிக்கு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here