கூட்டமைப்பின் கூட்டத்தில் பெரும் களேபரம்: சம்பந்தனின் கட்டளையையும் மீறி குழப்பத்தில் ஈடுபட்ட குழு; வெற்றிடமானது பேச்சாளர் பொறுப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. தமக்கு கட்டாயம் பதவி தேவையென சுமந்திரன் அணி பெரும் மோதலில் ஈடுபட்டது. இரா.சம்பந்தன் அமைதியாகவும், கறாராகவும் கருத்து தெரிவித்த போதும், அதை புறமொதுக்கி பெரும் மோதலில் ஈடுபட்டது சுமந்திரன் அணி.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை சுமந்திரன் அணி குறிவைத்துள்ளது, சுமந்திரன் அணி சார்பில் சி.சிறிதரன் பேச்சாளர் பதவிக்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தமிழ் பக்கம் ஏற்கனவே- சில வாரங்களின் முன்னரே செய்தி வெளியிட்டிருந்தது.

அது இன்று உறுதியானது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று கூடியது.

இதன்போது, கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி பற்றி ஆராயப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், தான் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன், சி.சிறிதரனை அடுத்த பேச்சாளராக சிபாரிசு செய்வதாக தெரிவித்தார்.

இதன்போது, கோவிந்தன் கருணாகரம், தமது பரிந்துரையாக செல்வம் அடைக்கலநாதனின் பெயரை குறிப்பிட்டார்.

சுமந்திரனின் அணியில்- சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அதனை எதிர்த்தனர். இதுவரை சுமந்திரன் எதிர்ப்பாளராக தன்னை காண்பித்து வந்த சார்ள்ஸ், இன்று பல்டியடித்தார். அது கொள்கைக்கானதாக அல்லாமல் இரகசிய டீலின் அடிப்படையிலானது என்பது, அவர் அதற்கு சொன்ன காரணத்தில் வெளிப்பட்டது. அந்த காரணத்தை பின்னர் தனியாக குறிப்பிடுகிறோம்.

சுமந்திரன் மூலம் கட்சிக்குள் குறுக்கு வழியில் நுழைந்த சிங்கள பின்னணியுடைய வேட்பாளர் சாணக்கியன், சுமந்திரன் அணியின் முடிவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அது இன்று நடந்தது. செல்வம் அடைக்கலநாதனை ஆதரிக்க முடியாமைக்கு சாணக்கியன் சொன்ன விடயம் என்னவென்பது மிக சுவாரஸ்யமானது. அதை பினனர் குறிப்பிடுகிறோம்.

செல்வம் அடைக்கலநாதன் தனக்கு எதிராக அறிக்கை விட்டார், அதனால் பேச்சாளராக முடியாது என சுமந்திரன் தெரிவித்தார். சுமந்திரன் பல வருடங்களாக பங்காளிக்கட்சிகளிற்கு எதிராக பேசியதை சுட்டிக்காட்டிய பங்காளிகள், சுமந்திரன் எப்படி இதுவரை பேச்சாளராக நீடித்தார் என கேள்வியெழுப்பினர்.

இரு தரப்பும் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, கைகலப்பாக மாறலாமென்ற நிலைமையும் ஏற்பட்டது.

களேபரத்தை கட்டுப்படுத்த இரா.சம்பந்தன் பல முயற்சிகள் செய்தார். செல்வம் அடைக்கலநாதனையே பேச்சாளராக நியமிக்க வேண்டுமென்றும், தனது ஆதரவு அவருக்குத்தான் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

எனினும், சுமந்திரன் அணி தொடர்ந்து குழப்பத்தில் ஈடுபட்டது.

இறுதியில், இரா.சம்பந்தன் ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டார். “சிறிதரன் ஏதாவது பொறுப்பில் இருக்க ஆசைப்படுகிறார். அவர் கொறடா பொறுப்பிலேயே இருக்கட்டும். பேச்சாளர் பொறுப்பிற்கு ஆசைப்படாதீர்கள். அது பெரிய விடயம். இம்முறையும் கொறடாவாகவே இருங்கள். செல்வம் பேச்சாளராக இருக்கட்டும்“ என தெரிவித்தார்.

எனினும், சிறிதரன் அதை ஏற்கவில்லை. தனக்கே பேச்சாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

அதுவரை கொறடாவிற்கு பரிந்துரைக்கட்டிருந்த சித்தார்த்தன், தனக்கு பதவி தேவையில்லையென்றும், சிறிதரனை அதற்கு நியமித்து, செல்வம் அடைக்கலநாதனை பேச்சாளராக நியமிக்கலாமென சமரசம் செய்ய முயன்றார். எனினும், சிறிதரன் மறுத்து, தனக்கு உயர்ந்த பொறுப்பு தேவையென்றார்.

நீண்டநேரமாக நீடித்த மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தின் தொடக்கத்திலேயே பேச்சாளர் பொறுப்பிலிருந்த சுமந்திரன் விலகி விட்டதால், அடுத்து பேச்சாளரை நியமிக்கும் வரை கூட்டமைப்பிற்கு பேச்சாளர் யாரும் இருக்கமாட்டார்கள்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இரவு இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here