12 ஐ.பி.எல் தொடரில் நரைனின் பந்தில் ஒரு பௌண்டரியும் அடிக்காத தோனி!

தோனி பொதுவாக தான் நினைத்தால் சிக்ஸ் அடிக்கக் கூடிய வீரர். அந்த அதீத நம்பிக்கை கடைசியாக அவரை மிகவும் மெதுவான வீரராகவும், அடிக்க வேண்டிய பந்துகளைக் கூட இதனால் ஒன்று இரண்டு ரன்கள் மட்டுமே அவர் எடுப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் மிகவும் ஆச்சரியகரமான ஒரு புள்ளி விவரம் என்னவெனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடும், மே.இ.தீவுகளின் ஓஃப் ஸ்பின் பந்துவீச்சு சகலதுறை வீரர் சுனில் நரைனை இதுவரை 12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் உலகின் சிறந்த ஹிட்டராகக் கருதப்பட்டு வந்த தோனி ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை என்பது ஒரு விசித்திரமான புள்ளி விவரம் தான்.

இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ‘டாடீஸ் ஆர்மி’ சிஎஸ்கே மோதுகிறது, அதுவும் அன்று கே.எல்.ராகுலின் மந்தமான துடுப்பாட்டத்தினாலும், ஆங்காங்கே இடைவெளி நிரம்பிய களவியூகத்தை டுபிளெசி, ஷேன் வட்சனுக்கு அமைத்தது. திரும்பத் திரும்ப ஷோர்ட் பைன்லெக்கில் பீல்டரை நிறுத்தி டீப் ஸ்கொயர்லெக், டீப் ஃபைன்லெக் திசையில் பீல்டரை நிறுத்தாமல் லெக் திசையில் பந்து வீசியதும் சிஎஸ்கேவுக்கு விக்கெட் இழப்பில்லாத வெற்றியை அன்று பெற்றுத் தந்தது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சுனில் நரைனை இதுவரை 59 பந்துகளை எதிர்கொண்ட தோனி 29 ரன்கள்தான் எடுத்துள்ளார். ஒரு முறை அவரிடம் ஆட்டமிழந்துள்ளார், படுஆச்சரியம் என்னவெனில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பதே. ஸ்ட்ரைக் ரேட் மிகவும் சுமாரான 49.15%. தான்.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் தோனி இறங்கினால், சுனில் நரைனுக்கு ஓவர் இருந்தால் சுனில் நரைன் பந்தில் தன் முதல் பவுண்டரியை அடிப்பாரா என்ற சுவாரஸியமான கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தோனி ஏன் சுனில் நரைனை பவுண்டரி அடிக்க முடியவில்லை சொதப்புகிறார் என்பதை ஆகாஷ் சோப்ரா அலசிய போது கூறியதாவது:

தோனி பின்னால் சென்று கட் ஷொட் ஆடக்கூடியவரும் அல்ல. மேலேறி வந்து சிக்ஸ் அடிப்பதையும் சமீபமாக அவர் அடிக்கடி செய்வதில்லை. ஸ்வீப் ஷொட் ஆடுவது அறவே இல்லை. இந்த 3 ஆயுதங்களும் இல்லாமல் சுனில் நரைனை ஆட முடியாது.

மேலும் சுனில் நரைன் ரீச்சுக்கு போடாமல் கொஞ்சம் பின்னால், ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசக்கூடியவர் அந்த இடத்திலிருந்து அவரது ஓஃப் ஸ்பின் உள்ளே வரும் கரம் பந்து வெளியே நகரும் அல்லது நேராக வரும்.

தோனி செய்யும் முதல் தவறு தன் இடது காலை மிகவும் நீட்டி விடுகிறார். அப்படி செய்தால் வெறுமனே பந்தை தட்டிதான் விட முடியும். காலை கொஞ்சமாக நீட்டினால் பின்னால் சென்று ஆடலாம். கட் ஆட முடியாவிட்டாலும் கவர் திசையில் பஞ்ச் செய்யலாம். பந்தை மேலும் இறங்கி வந்து தூக்கலாம்.

ஆனால் இடது காலைத் தூக்கி முழ நீளத்துக்கு முன்னால் போடுவதால் அவரால் ஷொட்களை ஆட முடியவில்லை, என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ரா சொல்வது மிகப்பெரிய ஒரு விஷயம். ஆனால் தோனி ரசிகர்கள் என்ன கேட்பார்கள் தெரியுமா? ‘ஆகாஷ் சோப்ரா நீங்கள் ஆடிய போது என்ன கிழித்தீர்கள்’ என்று கேட்பார்கள். நல்ல ஆலோசனையைக் கூற ஒருவர் அதை செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கவாஸ்கருக்கு ஹூக் ஷொட், புல் ஷொட் ஆடத்தெரியாது என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் அந்த ஷொட்டில் வல்லவர் என்று மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர் ரொபர்ட்ஸ் ஒரு முறை கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அதை பிறகு டெல்லியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 95 பந்துகளில் கவாஸ்கர் சதம் அடித்தபோது கண் கூடாகக் கண்டோம். புல்,ஹூக் ஆடாத சுனில் கவாஸ்கர் புல், ஹூக் எப்படி ஆட வேண்டும், எந்தப் பந்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நிபுணர்தான், அவர் ஆடவில்லை என்பற்காக அவர் அது பற்றி பேசக்கூடாது என்று கூற நமக்கு உரிமையில்லை.

பொதுவாக தோனி யாரிடமிருந்தும் அறிவுரைகளை கேட்பவரல்ல. அவர் தன்னிலே முழு நிறைவு பெற்றுவிட்டதாகவே தன்னைக் கருதுகிறார் என்ற விமர்சனம் அவர் மேல் உண்டு.

ஆகாஷ் சோப்ரா கூறுவது போல் இடது காலை முழ நீளத்துக்கு முன்னால் நீட்டி ஆடுவதால் அவர் பவுண்டரி பந்துகளையும் சிக்சர் பந்துகளையும் ஒன்று அல்லது இரண்டு ரன்களாகவே மாற்ற முடிகிறது. சில வேளைகளில் வெறுமனே தட்டி விடத்தான் முடிகிறது. இதைத்தான் தோனியின் துடுப்பாட்டத்தில் சில காலங்களாக நாம் பார்த்து வருகிறோம், இதைத்தான் ஆகாஷ் சோப்ராவும் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here