‘மன்னார் வீதிகளில் நாயைப் போல கட்டியிழுத்து சென்றார்கள்’: வினோநோகராதலிங்கம் எழுதுகிறார்!

நினைவெழுதும் கதைகள் 01

மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். அரசியல் தலைவர்களாக நீங்கள் பார்த்து- வியந்த, விமர்சித்த, வாக்களித்த, வாக்களிக்காதவர்களின்- வாழ்வின் முழுமையான தரிசனத்தை இந்த தொடர் ஏற்படுத்துமென நம்புகிறோம்.

அரசியல் பிரபலங்கள் தங்களின் மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன்முறையாக அவர்கள் வெளிப்படையாக தமிழ்பக்க வாசகர்களிற்காக பேசவுள்ளனர். இவை நிச்சயம் நீங்கள் இதுவரை கேட்காத கதைகளாகவே இருக்கும்.

தமிழ் சூழலில் நிலவும் தியாகி கருத்துருவாக்கங்களால் உங்களிடம் வந்து சேராத பல கதைகள் இந்த தொடரில் நிச்சயம் உங்களிடம் வந்து சேரும்.

நான் வினோநோகராதலிங்கம். என்னை ஒரு அரசியல்வாதியாகத்தான் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால் அது என் அடையாளமல்ல. நம் மத்தியில் அரசியல் செய்பவர்கள் இரண்டு வகையானவர்கள். ஏதாவது ஒரு உத்தியோகம், வர்த்தகத்தில் இருந்துவிட்டு ஏதாவதொரு கட்சியினூடாக திடீரென தேர்தலில் குதித்து மக்கள் பிரதிநிதியாகுவது. இன்று இப்படியானவர்கள்தான் பெரும்பாலானவர்கள். வங்கிக் கணக்கில் தேவையான பணமும், நன்றாக பேசத் தெரிவதும்தான் இவர்கள் முதலீடு.

இன்னொரு வகையானவர்களும் அரசியல் செய்கிறார்கள். இளவயதிலேயே இந்த மக்களிற்காக போராட புறப்பட்டவர்கள், தமது உயிரையும் மதிக்காமல் மக்களின் விடிவிற்காக யுத்தகளத்தில் நின்றவர்கள், இப்போது மக்களிற்காக அரசியல் களத்தில் நிற்கிறார்கள். நானும் இந்தவகையானவன் என்பதில் எனக்கு எப்பொழுதும் தலைநிமிர்வு உண்டு.

சிலசமயங்களில் மக்கள் உங்களை புரிந்து கொள்வதில்லையோ என்ற வருத்தம் எழுவதில்லையா என சிலர் கேட்பார்கள். அவர்களிற்கெல்லாம் நான் சொல்லும் பதில்- “எந்த பிரதிபலனுமில்லாமல் இனத்தின் விடிவிற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் நாங்கள். நான் அன்றே வீழ்ந்திருந்தால் வினோவை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அப்படி ஆயிரக்கணக்கான நண்பர்கள் வீழ்ந்து விட்டனர். நான் இன்னும் வீழ்ந்துவிடாமல் இருக்கிறேன். இனத்தின் விடிவுதான் எங்கள் இலக்கு. அதற்கு எந்த பாதையால் செல்கிறோம் என்பதில்தான் சிறிய மாறுதல். மக்கள் என்றாவது சரியாக புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது“.

1994, 2000, 2001, 2004, 2010, 2015 பாராளுமன்ற தேர்தல்களில் நான் போட்டியிட்டவன். இதில் மூன்றுமுறை வெற்றிபெற்றேன்.

தேர்தல் அரசியலில் குதிப்பதற்கு பத்து வருடங்களிற்கு முன்னரே நான் இனவிடுதலை பயணத்தில் இருக்கிறேன். அந்த பத்து வருடங்களில் சந்தித்து சோதனை, வேதனை, சாதனைகளை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். தனிமையில் இருக்கும் போதும், பழைய நண்பர்கள் எப்போதாவது சந்திக்கும்போதும் மட்டும் இரைமீட்டிக் கொண்டிருந்த அனுபவங்கள் அவை.

இப்படியான அனுபவங்களை பேசும் தமிழ்பக்கத்தின் இந்த பகுதியில், எனது அனுபவங்களை பேசுவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதி எனது பிறப்பிடம். 1980களில் விடுதலை இயக்கங்கள் வீச்சம்பெற்று, வடக்கின் எல்லா பகுதிகளிலும் பிரசாரம் செய்து, ஆள்த்திரட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) சார்பில் புதுக்குடியிருப்பில் மகேசன் என்பவர் ஆள்த்திரட்டிக் கொண்டிருந்தார். அவரின் அறிமுகம் மூலம் நான் ரெலோ செயற்பாட்டாளர் ஆனேன். இது 1983 இல் நடந்தது.

நான் ரெலோ செயற்பாட்டாளர் என்பது வீட்டில் தெரியாது. பிரசாரத்தில் ஈடுபடுவது, சுவரொட்டி ஒட்டுவது, கலண்டர் விற்பனை செய்து இயக்கத்திற்கு நிதி சேகரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தேன். ஊரிலேயே இதை செய்து வந்ததால் வீட்டிற்கும், ஆசிரியர்களிற்கும் தெரிய வந்து விட்டது. தொடர்ந்து ஊரிலிருக்க முடியாத நிலையேற்பட்டபோது, இயக்கம் வேறு இடத்திற்கு என்னை மாற்றியது. விரைவிலேயே இராணுவ பயிற்சிக்காக இந்தியாவிற்கும் அனுப்புவதாக சொன்னார்கள். இந்தியா செல்வதானால் யாழ்ப்பாணம் போக வேண்டும். யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியிலிருந்தே ரெலோவின் இந்திய படகுப் பயணங்கள் இருந்தன.

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணம் போவதென்பது இலேசான விடயமல்ல. ஆனையிறவில் இராணுவச்சோதனை சாவடி இருந்தது. அதை கடப்பவர்கள் கடுமையான விசாரணை, சோதனையை சந்திக்க வேண்டும். இளைஞர்களில் சந்தேகம் வந்தால் இரண்டாம் பேச்சிற்கு இடமில்லாமல் கைதுசெய்து விடுவார்கள். அதை கடக்க வேண்டும். அப்போது முல்லைத்தீவு பகுதியிருந்து உயர்தர வகுப்பு மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் யாழ்ப்பாண நகரத்திற்கு தட்டிவானில் வகுப்புகளிற்கு போவார்கள். இன்னும் இரண்டு புதிதாக இணைந்தவர்களையும் என்னையும் அழைத்து கொண்டு தட்டிவானில் மகேசன் புறப்பட்டார்.

சோதனைச்சாவடியில் பொலிசார் ஒவ்வொருவராக விசாரணை செய்தனர். என்னையும், கூட வந்த இருவரையும் விசாரித்தபோது, யாழ் நகரிற்கு தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறினோம். ஏற்கனவே தயாராக புத்தகங்களும் வைத்திருந்தோம். அதை காட்டினோம். எங்களை விட்டுவிட்டார்கள். நாங்கள் தட்டிவானில் ஏறிவிட்டோம். ஆனால் மகேசனை விசாரணைக்காக முகாமிற்குள் அழைத்து சென்றனர்.

எமக்கு உண்மையில் பயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. விசாரணையில் மகேசன் உளறிக்கொட்டி, எங்களையும் பிடித்துவிடுவார்களோ என பயந்தோம். ஆளையாள் பார்த்து முழிந்து கொண்டிருந்தபோது, நல்லவேளையாக மகேசனை விட்டுவிட்டார்கள்.

ஒருவழியாக யாழ்ப்பாணம் வந்து அன்றிரவே படகில் இந்தியா பயணமானோம். இந்தியாவின் வடபழனியில் அரசியல் வகுப்புக்கள் நடந்தன. திண்டுக்கல்லின் மங்கலம்கொம்பு கிராமத்திற்கு அருகில் உள்ள மலையில் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் கொட்டில்கள் அமைக்கும் வேலையும் நமக்குத்தான். மலையில் ஏறி மரம், தடிகளை வெட்டி கீழே கொண்டு வர வேண்டும்.

அது கரணம் தப்பினால் மரணம் இடம். பல இடங்களில் செங்குத்தாக இருந்தது. அதில் ஏறிச்சென்று மரங்களை வெட்டி, கீழே கொண்டு வர வேண்டும். ஒரு குழுவாக செய்வதால் உற்சாகமாக இருக்கும். ஆனால் ஆபத்திற்கு குறைவில்லை.

எனக்கு முன்பாக சிலர் மலையேறி சென்று மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் நானும் இன்னும் சிலரும் சென்றோம். ஆபத்தான பகுதியொன்றில் ஏறும்போது, மேலேயிருந்த மரக்கிளையொன்றை எட்டிப்பிடித்தேன். முன்பாக ஏறியவர்கள் வெட்டிவிட்ட மரமென்பது எனக்கு தெரியவில்லை. மரம் கீழே உருண்டு, என்னையும் தட்டிவிட்டது. மரத்துடன் கீழே உருண்டு வந்தேன். அன்று எனது கதை முடிந்திருக்க வேண்டும். ஆனால் வேறுவிதமாக நடந்தது. உருண்டு வந்த என்னை பின்னால் வந்த ஒரு நண்பன் எட்டிப்பிடித்தான். அவன் நிலைதடுமாற, அதற்குள் இன்னும் கொஞ்ச நண்பர்கள் பிடித்துவிட்டனர். நண்பர்களால் அன்று காப்பாற்றப்பட்டேன்.

நான் மீண்டும் இலங்கை திரும்பியபோது, எமது தலைவர் சிறிசபாரத்தினம் கொல்லப்பட்டிருந்தார். எமக்கும் விடுதலைப்புலிகளிற்குமிடையில் அடிக்கடி சண்டைகள் நடந்தன. யாழ்-மன்னார் வீதியில் உள்ள தோத்தவடியில் 75 பேர் கொண்ட அணியுடன் முகாமிட்டிருந்தேன். முகாமிற்கான உணவுப்பொருட்கள் பஸ்மூலம் கொண்டுவரப்படும். பாதுகாப்புடன் சென்று பொருட்களை கொள்வனவு செய்து வருவார்கள். அந்த சமயத்தில் புலிகள், இந்திய இராணுவம் என இருதரப்புடனும் அடிக்கடி மோதிக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆயுதப்போராட்டத்தால் தீர்வு எட்டுவது சாத்தியமாகாது என்பதை கட்சி உணர்ந்து 1988 இல் அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் முயற்சிகள் ஆரம்பித்தன. அப்போது நான் மன்னார் நகர பொறுப்பாளராக இருந்தேன். அப்போது ரெலோ உறுப்பினர்களை இந்திய இராணுவம் கைது செய்தது.  என்னையும் கைது செய்தனர். நான் பொறுப்பாளர் என்பதால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன். எமது ஆயுதங்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் இராணுவத்தின் நோக்கம். உடலில் மின்சாரம் செலுத்தி விசாரணை செய்தார்கள். அந்த சமயத்தில் நடந்த சித்திரவதையை வார்த்தையில் சொல்ல முடியாது.

இந்த சித்திரவதைகள் எல்லாம் மூடிய அறையில் நடந்தது. இன்னொரு விதமான சித்திரவதையும் நடந்தது. கையில் விலங்கிட்டு, என்னை கயிற்றால் கட்டி நாயை கூட்டிச் செல்வதைபோல மன்னார் நகரவீதிகளில் இழுத்து செல்வார்கள். ஆயுதங்களை காட்டு, இயக்க உறுப்பினர்களை காட்டு என மூன்றுமாதங்களாக கொடுமைப்படுத்தினார்கள். மூன்றுமாதத்தின் பின்னர் ஒருமாதிரி விடுதலையாகினேன்.

1990 இன் பின்னர் அரசியல்செயற்பாடுகளில் எமது கட்சி ஈடுபட்டது. 1994 பாராளுமன்ற தேர்தலில் முதலில் போட்டியிட்டேன். வெற்றிபெற முடியவில்லை. ஆனால் இயன்றவரையில் மக்கள் பணி செய்தேன். இப்போது நினைக்கவும் திருப்தியளிக்கும் விடயமொன்றுண்டு.

இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த இருப்பிடமற்றவர்களிற்கு காணி வழங்கியதே அது. சிறிநகர், குகன்நகர், கற்குழி, தங்கநகர் போன்ற எல்லையோர கிராமங்களில் அவர்களை குடியமர்த்த நிறைய முயற்சிகள் செய்தேன். அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதால் சிங்கள குடியேற்றங்கள், நிலஅபகரிப்பு இப்பொழுது தடுக்கப்பட்டுள்ளது.

பிரதிபலனை எதிர்பாராமல் மக்கள் நலன் ஒன்றையே இலக்காக கொண்டு வாழ்வதால், இப்படியான சம்பவங்களை நினைக்க முழு திருப்தியாக உள்ளது.

புதிய அனுபவங்கள் வரும்….

© இது தமிழ்பக்கத்தின் பிரத்தியேக தயாரிப்பு. காப்புரிமை பெற்ற இந்த தொடரை முன்னனுமதியின்றி பிரதிசெய்வது, காப்புரிமை சட்டங்களை மீறுவதாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here