போதைக்கும்பல் பற்றி தகவல் வழங்கினார் என 2 கையும் வெட்டப்பட்ட குடும்பஸ்தர்: யாழ் போதனா வைத்தியசாலையில் கைகள் மீள இணைக்கப்பட்டன!

அண்மையில் இரண்டு கைகளும் வாள்வெட்டு கும்பலால் வெட்டப்பட்ட ஒருவருக்கு சிகிச்சையளித்த யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், அவரது கைகளை மீள பொருத்தியுள்ளனர்.

அந்த பிரதேசத்தில் உள்ள மதுபோதை கும்பல்களை பற்றி முறையிட்டார் என்ற சந்தேகத்திலேயே ரௌடிகள் அவரது இரண்டு கையையும் வெட்டியுள்ளனர்.

இது குறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தனக்கு நேர்ந்த கதி இன்னொருவருக்கு நேராதபடி, வாள்வெட்டு கும்பலை கட்டுப்படுத்த வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

மாணிக்கபுரம், விஸ்வமடுவை சேர்ந்த மதுரைவீரன் காந்தராஜ் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

22ஆம் திகதி இரவு 10 மணியளவில் வீடு சென்றபோது, எனக்கு வாள்வெட்டு நடந்தது. உடனடியாக முச்சக்கர வண்டியில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் செய்யப்பட்டு, உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன். 23ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்க கொண்டு வரப்பட்டேன்.

வலது கை பகுதியளவிலும், இடது கை முற்றாகவும் துண்டிக்கப்பட்டது. கையை பிடுங்கி வீசிவிட்டு வரலாமென நான் நினைத்தபோது, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் கையை பொருத்தித்தந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

எமது பிரதேசத்தில் மதுபோதையில் திரியும் கும்பல்களே என் மீது தாக்கினார்கள். முதல்நாள் என்னைக் கேட்டனர், எமக்கு எதிராக நீங்கள் கடிதம் எழுதுவது நீங்களா என. நான் இல்லையென்றேன். நான் எந்த அமைப்பிலும் இல்லை. அவர்களை பற்றி யார் முறையிட்டார்கள் என்பது எனக்கு தெரியாதென்றேன்.

மறுநாள் எனது கையை வாள்வெட்டு கும்பல் வெட்டியது.

எனக்கு நேர்ந்த கதி இன்னொருவருக்கு நடக்காதபடி, ஜனாதிபதியும், பிரதமரும் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,

வடபகுதியிலுள்ள வாள்வெட்டு கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு பல தரப்பினரும் கணிசமான நடவடிக்கையெடுக்க வேண்டும்.

அண்மையில் நடந்த விசுவமடு சம்பவத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் மீது உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும். இந்த கலாச்சாரம் தொடர்ந்தால் இந்த பகுதியில் பலர் அநியாயமாக உயிரிழக்கும் நிலை ஏற்படும். எனவே போதைவஸ்து, வாள்வெட்டு, மணல்கடத்தல் ஒழிக்கப்பட வேண்டும்.

இது குறிப்பிட்ட சில நபர்களை மட்டுமல்லாமல், வடக்கிலுள்ள அனைவரையும் பயம், பதற்றத்திற்குள்ளாக்கி, அவர்கள் இரவில் நித்திரை கொள்ள முடியாமல் நோயாளிகளாக்கும் நிலைமை ஏற்படுகிறது.

இந்த கலாச்சாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் விளைவுகளிற்கான சிகிச்சைகளை வைத்தியசாலைகளில் வழங்கலாம். ஆனால் இந்த இளைஞர்கள் அளவிற்கதிகமாக செய்யும் குழறுபடிகளால் வைத்தியசாலைகளிற்கு சிகிச்சையளிப்பது மிக கடினம். வைத்தியசாலைகளில் இவ்வாறான சம்பவங்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here