ஜனாதிபதி ஆணைக்குழுவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மைத்திரி வெளியிட்ட கருத்துக்கள்!

ஒரு நாட்டில் ஒரு குண்டு வெடிக்கும் போது நாட்டின் தலைவர் அதற்குப் பொறுப்பேற்பதில்லை. நாட்டு தலைவரை நோக்கி எந்த நாட்டிலும் விரலை நீட்டுவதில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (05) சாட்சியமளிக்கும் போது இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கான பொறுப்பை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் ஊற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு யாராவது தயாராகி வருவதாக தகவல் இருந்தால் சந்தேக நபர்களை கைது செய்ய ஜனாதிபதியின் உத்தரவு தேவையில்லை என்று அவர் கூறினார்.

சஹ்ரான் ஹாஷிம் உட்பட தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் குழு பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராகி வருவதாக வெளிநாட்டு உளவுத்துறையிடமிருந்து பெறப்பட்ட உளவுத்தகவல் பற்றி தனக்குத் தெரிந்திருந்தால், மருத்துவ சிகிச்சை பெற அவர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்திருப்பார் என்றும் தாக்குதலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

பாதுகாப்பு சபையில் பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் கசிய விடப்பட்ட சூழ்நிலை காரணமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரை பாதுகாப்பு சபைக்கு வரவழைப்பதை நிறுத்தியதாகவும் கூறினார்.

2016 நவம்பரில் பாதுகாப்பு சபை கூட்டத்தில் நிஹாப்பை தடை செய்வதென எடுக்கப்பட்ட தீர்மானம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்ப்பால்  முறியடிக்கப்பட்டதாகவும், பின்னர் அது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது என்றும், இது குறித்து மீண்டும் விவாதிக்க இயலாது என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

ஏன் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு பிரதமர் பொலிஸ்மா அதிபரை அழைக்கவில்லை என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். இரகசியத்தை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு சபை கூட்டம் போன்ற இடத்திலிருந்து இரகசியம் எவ்வாறு வெளியேறியது? அதுதான் காரணம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here