பொதுமக்களிற்கு வடக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

வடமாகாணத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு-

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வடமாகாணத்தில் கொரோனா தொற்று பரம்பலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

1. பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும்.

2. பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.
3. பொது இடங்களில் இருவருக்கு இடையில் ஆகக்குறைந்தது 1மீட்டர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

4. அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே உள்ளே செல்ல வேண்டும், அத்துடன் வீட்டிற்கு திரும்பிய பின்பும் கைகளை சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே வீட்டிற்கு உள்ளே செல்ல வேண்டும்.

5. பொதுமக்கள் அவசியமான விடயங்கள் தவிர வெளியே செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

6. அவசியமற்ற விழாக்கள், ஒன்று கூடல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது பிற்போடவேண்டும். கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளில் சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும்.

7. பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு ஏற்ற எண்ணிக்கையான பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுவதுடன் அனைவரும் முககவசம் அணிவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

8. பொதுமக்கள் ஒன்று கூடும் சந்தைகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களிலும் சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும்.

9. வணக்க தலங்களில் நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையுடன் நடாத்தப்படுவதுடன் இதற்காக வழங்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here