யாழில் பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்… அத்தியாவசிய பொருட்கள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்கின்றன!

மினுவாங்கொட வர்த்தக நிலையமொன்றில்

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் நகரில் சில அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து விட்டதாக வர்த்தக நிலையங்களில் தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல் நேற்று வெளியானதில் இருந்தே வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் முண்டியடிக்க ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்ததுடன், யாழிலும் ஒரு யுவதி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நகரில் வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் அலைமோத ஆரம்பித்துள்ளனர்.

இதனால் நகரில் நேற்று இரவு சில அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து விட்டதாக வர்த்தக நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், நேற்று மதியம் அல்லது மாலையில் பற்றச்சீட்டு பதிவு செய்தவர்களிற்கே நேற்று இரவு அனேக வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் தேவையற்ற பீதியடைந்து பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம், போதுமான பொருட்கள் கையிருப்பில் உள்ளது, பொருள் விநியோகத்தில் தடையில்லை, பொதுமக்களின் அநாவசிய வாங்கிக் குவிப்பால் வர்த்தகர்கள் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி கொள்ளை இலாபம் அடிப்பார்கள் என யாழ் மாவட்ட அரச அதிபர் இன்று பகிரங்க அறிவித்தல் விடுத்தும், பொதுமக்கள் முண்டியடித்து வருகிறார்கள்.

கடந்த லொக் டவுணிலும் பொதுமக்கள் இப்படி வீணாக அலைமோதிய போதும், பொருள் விநியோகம் சீரடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here