கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இராணுவ முகாமிற்கான பெயர்க்கல் நாட்டப்பட்டது!

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இராணுவ முகாம் அமைத்துள்ளதாக குறித்த இடத்தை நீண்ட கால குத்தகைக்கு எடுத்தவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு அவ்விடத்தில் இராணுவப்படைப்பிரிவின் பெயர்க்கல் ஹட்டன் -தலவாக்கலை பிரதான வீதிக்கு அருகில் நாட்டப்பட்டுள்ளது.

இதில் ‘தலைமையகம் – 581 வது படைப்பிரிவு’ என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் இராணுவத்தினர் எந்த வித அனுமதியுமின்றி கொரோனா ஊரடங்கு வேளையில் அத்துமீறி கட்டிடங்களுக்குள் குடியேறியுள்ளதாக இவ்விடத்தை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ள பெரும்பான்மையினத்தவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கடந்த மாதம் 15 ஆம் திகதி மற்றும் 29 ஆம் திகதிகளில் இடம்பெற்றமை முக்கிய விடயம். பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் இதில் ஒரு தரப்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையும் இராணுவத்தினரும் விளங்குவதால் அவர்கள் அரசாங்கத்தின் அங்கத்தவர்களாக விளங்குகின்றபடியால், வழக்கு தொடரப்பட்டுள்ள பிரிவு 66 இன் படி இந்நீதிமன்றால் வழக்கை முன்னெடுக்க முடியாது என வாதிட்டிருந்தனர்.

பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளை 29 ஆம் திகதி எழுத்து மூலம் சமர்ப்பிக்கும்படி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை குறித்த இடத்தில் இராணுவத்தினரால் இப்பெயர்க் கல் நாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here