காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து கர்நாடக இடைத்தேர்தலில் டி.கே.ரவியின் மனைவி போட்டி?

பெங்களூருவில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குஷூமா நேற்று காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

இதையடுத்து அவர் ராஜராஜேஷ்வரி நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்பட்ட டி.கே.ரவி ‌கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூருவில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகா முழுவதும் போராட்டம் வெடித்தது.

மாணவர்கள் போராட்டத்தின் மத்தியில் பேசிய டி.கே.ரவியின் மனைவியும் காங்கிரஸ் நிர்வாகி ஹனுமந்த்ராயப்பாவின் மகளுமான குஷூமா தான் சமூக பணியில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் குஷூமா பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருடன் ராஜராஜேஷ்வரி நகரைச் சேர்ந்த‌ நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும், இளைஞர்களும் காங்கிரஸில் இணைந்தனர்.

பின்னர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘ராஜராஜேஷ்வரி நகர், சிரா தொகுதிகளுக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நவம்பர் 3‍ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

ராஜராஜேஷ்வரி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மனைவியை வேட்பாளராக நிறுத்துமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டி.கே.ரவியின் மனைவி குஷூமா போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சியிலும் இணைந்துள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து மேலிடத் தலைவர்கள் முடிவெடுப்பார்கள்’என்றார்.

ராஜராஜேஷ்வரி நகர் தொகுதியில் ஒக்கலிகா சாதியை சேர்ந்த வாக்காள‌ர்கள் கணிசமாக இருப்பதால், அதனை குறி வைத்து குஷூமாவை களமிறக்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

அவருக்கு சமூகத்தில் உள்ள நன்மதிப்பைக் கொண்டு பெண்கள், இளம் வாக்காளர்களின் வாக்குக‌ளை எளிதில் பெற முடியும். இதன் மூலம் ஆளும் பாஜகவை வீழ்த்தலாம் என காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here