நெல்சிப் முறைகேடு: பரு.தவிசாளர் 17 இலட்சம், வல்வெட்டி நகரசபை தலைவர் 14 இலட்சம் மீளளிக்க உத்தரவு!

நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்த வடமாகாணசபையின் கணக்காய்வு குழு, வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை பிரதேசசபையின் தலைவர்கள் மற்றும் அந்த சமயத்தில் சபைகளின் செயலாளர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென முடிவு செய்துள்ளதென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தல் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தன. இதை வடக்கு மாகாணசபையில் எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முதலில் கவனப்படுத்தியிருந்தனர். இதையடுத்து, வடமாகாண நிர்வாகம் விசேட குழு அமைத்து நெல்சிப் திட்டத்தை ஆராய்ந்தது.

நெல்சிப் மூலம் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட 246 திட்டங்களை ஆராய்ந்ததில், அதில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றது கண்டறியப்பட்டிருந்தது.

கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் 2015ம் ஆண்டு அவதானத்திலும், நெல்சிப் முறைகேடுகள் கவனப்படுத்தப்பட்டிருந்தன. வடமாகாண கணக்காய்வுகுழுவிலும் இது ஆராயப்பட்டு வந்தது.

கணக்காய்வுகுழு விசாரணைகளில், வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை பிரதேசசபைகளில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடு இருந்தது கண்டறியப்பட்டது. அந்த சமயத்தில் முறைகேடுகள் நடந்த சபைகளின் தலைவர், செயலாளர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் இழப்பீட்டை செலுத்த வேண்டும் கணக்காய்வுக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி பருத்தித்துறை பிரதேசசபையில் முறைகேடு செய்யப்பட்ட 17 இலட்சம் ரூபாவை  பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளராக இருந்த பூ.சஞ்சீவன் (தமிழரசுக்கட்சி) மற்றும் அந்த சமயத்தில் செயலாளராக இருந்தவர் இணைந்து செலுத்த வேண்டும் என்றும்,  வல்வெட்டித்துறை நகரசபையில் முறைகேடு செய்யப்பட்ட 14 இலட்சம் ரூபாவை அந்த சமயத்தில் தலைவராக இருந்த ந.அனந்தராஜ்(ஈ.பி.ஆர்.எல்.எவ்) மற்றும் அந்த சமயத்தில் செயலாளராக இருந்த செயலாளர் ஆகியோர் இணைந்து செலுத்த வேண்டுமென கணக்காய்வுகுழு தீர்மானித்துள்ளது.

இவர்களிற்கான முறைப்படி அறிவித்தலை அனுப்பும் தயாரிப்பில் கணக்காய்வுகுழு ஈடுபட்டு வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

இதேவேளை, நெல்சிப் ஊழல்கள் அம்பலமானதை தொடர்ந்து அதன் பிரதான பொறியியலாளர் தலைமறைவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here