UPDATE: கம்பஹாவில் 69 பேருக்கு கொரோனா; மேலும் அதிகரிக்கும் அபாயம்; இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்!

நேற்று திவுலபிட்டிய மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 150 பி.சி.ஆர் சோதனைகளில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இன்று (5) கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணுடன் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 69 பேரே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 1400 ஊழியர்கள் இன்று மற்றும் நாளை பி.சி.ஆர் சோதனைகளிற்கு நடத்தப்படவுள்ளனர். இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயமுள்ளது.

கடந்த சில நாட்களாக ஆடை உற்பத்தி தொழிற்சாலையின் ஊழியர்களை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடை தொழிற்சாலை ஊழியர்களைப் பார்வையிட்டவர்கள் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பதைக் கண்காணித்து அறிந்து கொள்வதில் அடுத்த 72 மணிநேரம் முக்கியமானது என லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கடந்த 07 நாட்களில் மினுவாங்கொட, திவுலபிட்டி மற்றும் வெயாங்கொடவுக்குச் சென்று சுகாதார பிரச்சினைகளை சந்தித்த நபர்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

முகக்கவசம் அணிவது போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவின் தகவல்படி, இன்று காலை 150 பேர் திவுலப்பிட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளுடன் தொடர்பை பேணிய 17 பாடசாலை மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொடவைச் சேர்ந்த மேலும் 600 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here