பிரான்ஸிலிருந்து பிரிந்து செல்வதை நியூ கலிடோனியா மக்கள் நிராகரித்தனர்!

தென் பசிபிக் தீவுக்கூட்டங்களான நியூ கலிடோனியாவில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பிரான்சிலிருந்து பிரிந்து செல்வதற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

பிரிந்த செல்ல விருப்பம் இல்லையென 53.26% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தீவுக்கூட்டத்தின் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸிலிருந்த பிரிந்த செல்லும் நிலைப்பாடு இம்முறை தோல்வியடைந்திருந்தாலும், கடந்த 2018 வாக்கெடுப்பை விட அதிகமான மக்கள் பிரிந்து செல்ல வாக்களித்துள்ளனர். ஆம் மற்றும் இல்லைக்கு இடையில் குறுகிய வாக்கு வித்தியாசமே உள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வாக்கெடுப்பு முடிவை “ஆழ்ந்த நன்றியுணர்வோடு” வரவேற்றார்.

270,000 மக்கள் தொகையை கொண்ட நியூ கலிடோனியாவில் சுதந்திரம் கோரும் பூர்வீக மக்களுக்கும், பிரான்சில் தங்க விரும்பும் குடியிருப்பாளர்களுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த வாக்கெடுப்பு நடந்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளில் அதன் தலைவிதியை தீர்மானிக்க பசிபிக் தீவுக்கூட்டம் தேர்தலுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். 2018 ஆம் ஆண்டில் நடந்த முதல் வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு எதிராக 56.7 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டது. இந்த முறை நெருங்கிய முடிவு, அடுத்த முறை, சுதந்திர பிரகடனமாக அமையலாமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்முறை வாக்களிப்பில் அதிகமானவர்கள் உற்சாகத்துடன் பங்களித்தனர். வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வாக்குப்பதிவு 80 சதவிகிதம் என்று அதிகாரிகள் கூறினர். 2018 இல் நடைபெற்ற முதல் சுதந்திர வாக்கெடுப்பில் 74 சதவிகித வாக்களிப்பே இடம்பெற்றது. இன்று மக்கள் வாக்குகளை பதிவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும் இடையில் அமைந்துள்ள நியூ கலிடோனியா, “த பெப்பிள்” என்று அழைக்கப்படுகிறது. இது 1853 ஆம் ஆண்டில் பிரான்சால் கைப்பற்றப்பட்டது.

பிரான்சுக்கும் நியூ கலிடோனியாவிற்குமிடையில் 16,000 கிலோமீட்டருக்கும் (10,000 மைல்) அதிக தொலைவு இடைவெளியுள்ளது.

நியூ கலிடோனியா உலோக உற்பத்தியில் -குறிப்பாக நிக்கல்- உலகளாவிய பெரிய உற்பத்தியாளராகும். அத்துடன் சுற்றுலா மற்றும் பிரதான நிலப்பகுதியான பிரான்சின் நிதி உதவியும் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களாகும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 பில்லியன் யூரோக்கiள (1.75 பில்லியன் டொலர்) நியூ கலிடோனியாவிற்கு மானியம் வழங்குகிறது. இது நியூ கலிடோனியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

பிரான்சின் காலணியாதிக்கத்திலிருந்து இறுதியாக ஒரு நாடு சுதந்திரமடைந்து 40 ஆண்டுகளாகி விட்டது. 1977 இல் ஜிபூட்டி மற்றும் 1980 இல் வனடு ஆகிய நாடுகள் சுதந்தரமடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here