வல்லிபுர கோயிலுக்குள் குத்தாட்டம் போட அனுமதி மறுத்ததால் மடாதிபதியையும், உதவியாளரையும் அடித்து நொறுக்கிய ரௌடிகள்!

பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் மதுபோதையிலிருந்தவர்கள் நடத்திய தாக்குதலில் ஆலய மடாதிபதி ஒருவர் உள்ளிட்ட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வல்லிபுர ஆழ்வாரின் ஆஞ்சநேய மடையின் போது மது போதையில் வந்த இளைஞர் குழுவொன்று ஆடிப்பாடி குழப்பம் விளைவித்தனர். இதன்போது, ஆலயத்தின் பெரியாழ்வார் ஆச்சிரமத்தின் மடாதிபதி ஆனந்தன் சுவாமி மற்றும் இன்னொருவர் தலையிட்டு, மதுபோதை இளைஞர்களை வெளியேற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையிலிருந்தவர்கள், ஆலயத்தின் வெளிப்பகுதியில் காத்திருந்து, மடாதிபதியும் மற்றவரும் வந்தபோது தாக்குதல் நடத்தினர்.

இதில் இருவரும் காயமடைந்த நிலையில், அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பொலிசார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று காலை ஆலயத்திற்கு சென்ற பொலிசார், சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ஆலயத்திற்குள் அடாவடியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here