மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விடுமுறையில் யுவதிகள் வந்தார்களா?

மினுவாங்கொடவில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த சில யுவதிகள் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ளதாக பரவும் தகவலில் உண்மையில்லையென வடக்கு சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த திவுலப்பிட்டியை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அங்கு பணியாற்றிய சில யுவதிகள் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்ததாக தகவல் வெளியாகியது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 2 யுவதிகள் விடுமுறையில் வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அவர்களை அடையாளம் காணும் பணியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இது குறித்து வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு வினவியபோது, அவர்கள் விடுமுறையில் வரவில்லை, கம்பஹாவிலேயே தங்கியுள்ளனர் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here