திவுலப்பிட்டிய கொரோனா தொற்று: நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள 8 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுமார் 2 மாதங்களிற்கு மேலாக இலங்கைக்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், தற்போது மீண்டுமொரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அரசு சில அவசர அறிவிப்புக்களை முன்னெச்சரிக்கையாக விடுத்துள்ளது.

அரசு எடுத்துள்ள முக்கிய 8 நடவடிக்கைகள் இவை-

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிற்கும் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதற்கான அறிவிப்பை விடுத்தது.

நாடு முழுவதுமுள்ள முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மூடப்படும் என மகளிர் விவகாரங்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் அனைத்து கல்வி வகுப்புகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென இராணுவம் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

களனி பல்கலைகழகம் மற்றும் விக்ரமாராச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மகர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்படாததுடன், பொதுமக்கள் முனையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கம்பஹா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடமைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகளும் ஆசனங்களிற்கு அளவான பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டுமென்ற நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாக இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here