ஒரு காதல்… உதவியாளர் ஆடிய நாடகம்… மிரட்டிய மோப்பநாய்: புங்குடுதீவு அர்ச்சகர் கொலையில் நடந்தது என்ன?

புங்குடுதீவில் பூசகர் நேற்று முன்தினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சந்தேகநபர்களாக சக அர்ச்சகர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த கொலை விவகாரத்தில் மேலும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய அர்ச்சகரான இராசையா இராசரூப சர்மா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர்.

கொலை நடந்த உடனேயே பல்வேறு விதமான ஊகங்கள் எழுந்திருந்தன. அரச்சகர் பிரதேசத்தில் சட்டவிரோத மாடறுப்பிற்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார். சட்டவிரோதமாக மாடறுப்பவர்கள் தொடர்பில் பொலிசாருக்கும் தகவல் வழங்கி வந்தார். இதனால், மாடறுப்பவர்களே அவரை அடித்துக் கொன்றார்களா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எழுந்தது.

எனினும், விசாரணையில் முழுமையான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை

கடந்த 2ஆம் திகதி இரவு. 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு ஒரு அழைப்பு. புங்குடுதீவில் வீடு புகுந்த மர்மநபர்கள் தன்னை கட்டி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த அர்ச்சகரை கடுமையாக தாக்கி விட்டு சென்றுள்ளார்கள் என ஒருவர் தகவல் வழங்கினார்.

இதையடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

குறிப்பிட்ட வீட்டில் பொலிசார் நுழைந்த போது, ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அறையொன்றிற்குள் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவித்த பொலிசார், உடனடியாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பொலிசார் தடயங்களை சேகரிக்க முயன்றனர். குறிப்பிடத்தக்க தடயம் எதுவும் இருக்கவில்லை. சிசிரிவி காணொளி கார்ட் டிஸ்க்கும் அகற்றப்பட்டிருந்தது.

இதன்மூலம், சாட்சியற்ற கொலையை நடத்தியதாக கொலையாளிகள் திருப்தியடைந்திருக்க கூடும்.

சம்பவ இடத்திற்கு ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் பார்வையிட்டார். சடலம் பிரேத பரிசோதனைக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், அர்ச்சகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்தது.

அர்ச்சகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் என்பவர் மட்டுமே சம்பவம் நடந்த இடத்தில் நின்றவர்.

மோப்ப நாயால் வெளியான உண்மை

விதுஷனின் மூலமே விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியுமென்பது பொலிசாருக்கு தெரியும். அதனால் அவரிடம் விசாரணை நடத்தினர். சிலர் வீட்டுக்குள் புகுந்த தன்னையும் தாக்கி, அறைக்குள் கட்டி வைத்ததாக அவர் திரும்பத்திரும்ப சொன்னார்.

இதையடுத்து அவரது மேலாடையை கழற்றி சோதனையிட்டபோது, உடலில் காயங்கள் தென்பட்டன. அவை கீறல் காயங்கள். அவர் யாருடனோ மோதலில் ஈடுபட்டார் என்று சந்தேகிக்கத்தக்கவை. அது குறித்து விசாரித்தபோது, அவரிடமிருந்து திருப்திகரமான பதிலில்லை.

இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

மோப்பநாயின் மூலம் சோதனைக்குட்படுத்த முதல் பொலிசார் மீண்டும் விதுஷனிடம் விசாரணை நடத்தினர். மோப்பநாயிடமிருந்து யாரும் தப்ப முடியாது என்ற விடயத்தை கூறியபோது, விதுஷன் உண்மையை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்.

தானும், மேலும் இரண்டு அர்ச்சகர்களும் இணைந்தே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

அர்ச்சகர் ஏன் கொலை செய்யப்பட்டார்?

புங்குடுதீவின் வேறு இரண்டு ஆலயங்களில் அர்ச்சகர்களாக உள்ள இருவர் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். அவர்கள் சுழிபுரம் பாணாவெட்டை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுடன் இரண்டு பெண்களும் தங்கியிருந்தனர். அவர்கள் திருமண உறவுள்ளவர்களா என்பது தெரியவில்லை.

அர்ச்சகர்களுடன் பெண்கள் தங்கியிருந்தமைக்கு, இராசரூப சர்மா அதிருப்தி தெரிவித்து வந்துள்ளார். அந்த அர்ச்சகர்களிடமே சில தடவைகள் அது குறித்து பேசியிருக்கிறார். இதனால் இராசரூப சர்மாவிற்கும், அவர்களிற்குமிடையில் முரண்பாடான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்குள், இராசரூப சர்மாவின் உதவியாளராக விதுஷனிற்கு ஒரு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை இராசரூப சர்மா கண்டித்துள்ளார். காதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து இராசரூப சர்மா தன்னை தாக்கியதாக விதுஷன் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இராசரூப சர்மாவினால் தாக்கப்பட்டதும், ஆத்திரமடைந்த விதுஷன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி, மற்றைய இரண்டு அர்ச்சகர்களின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.

விதுஷன் தங்கியிருக்கும் இடத்தை அறிந்ததும், அங்கு சென்று வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் இராசரூப சர்மா.

இதையடுத்து, மற்றைய இரண்டு அர்ச்சகர்களுடன் விதுஷனும் இணைந்து, இராசரூப சர்மாவை கொல்லும் திட்டத்தை வகுத்தனர்.

அந்த இராத்திரிக்கு சாட்சியுண்டு!

சம்பவ தினம் இரவு அர்ச்சகர்கள் மது அருந்தியுள்ளனர். பின்னர் இராசரூப சர்மாவின் வீட்டிற்கு சென்று, வெளியில் நின்று அவரை அழைத்துள்ளனர். இராசரூப சர்மா வெளியே வந்தார்.

இரு தரப்பிற்குமிடையில் வாய்த்தர்க்கமாக, மூவரும் சேர்ந்து இராசரூப சர்மாவை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை நிலத்தில் விழுத்தி, இரும்புக் கம்பியினால் பின் தலையில் அடித்து கொன்றுள்ளனர்.

கொலை விவகாரத்தை திசைதிருப்பி- தம்மில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்கள் ஆடிய நாடகமே, விதுஷனை கட்டி வைத்தது. அறையொன்றிற்குள் விதுஷனை கட்டி வைத்துவிட்டு, அர்ச்சகர் கொல்லப்பட்டதாக ஆடிய நாடகம்.

கொலை தொடர்பான அத்தனை விடயங்களையும் விதுஷன் கக்கினார். இதையடுத்து,மற்றைய இரண்டு அர்ச்சகர்களுக்கும் பொலிசார் வலை விரித்தனர்.

‘தண்ணீர் பார்ட்டி’

அந்த இரண்டு அர்ச்சகர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சிவில் உடையில் பொலிசார் சென்றனர். அவர்கள் சென்ற போது, இரண்டு அர்ச்சகர்களும் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அந்த இரண்டு பெண்களும் வீட்டிலிருந்தனர்.

நான்கு பேரையும் வீட்டுக்குள் வைத்தே பொலிசார் அமுக்கினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச்சம்பவத்தை ஒப்புக்கொண்டனர்.

அத்துடன், கொலையின் பின் இராசரூப சர்மாவின் உடமையிலிருந்து அவர்கள் களவாடிய 15,000 ரூபா பணத்தை கொடுத்து, இரண்டு பெண்களையும் யாழ் நகரிற்கு பொருட்கள் வாங்க அனுப்பியதும் தெரிய வந்தது. திருடப்பட்ட பணம் அந்த பெண்களின் உடமையிலிருந்தது. அதனால் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஐந்து பேரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here