புத்தியை மறைத்த சல்லாபம்: புங்குடுதீவு அர்ச்சகர் கொலையில் சந்தேகநபர்கள் வாக்குமூலம்!

“மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம். அதனால் அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். சம்பவம் சிசிரிவியில் பதிவாகியிருக்கும் என்ற காரணத்தால் அதன் சேமிப்பகத்தை (Hard Disk) எடுத்துச் சென்று மறைத்தோம்” என்று சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன், பூசகரின் உடமையிலிருந்து எடுக்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது உதவியாளர் உட்பட மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டனர்.

பெண் ஒருவரை அழைத்து வந்து பூசகரின் உதவியாளர் உல்லாசமாக இருப்பதை கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், பெண் ஒருவரைக் காதலித்தமைக்காக பூசகர் தன்னைத் தாக்கினார் என்று உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து நேற்று முன்தினமிரவு மது அருந்திவிட்டு பூசகரை தாம் தாக்கியதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

தலையின் பின் பிடரியில் கம்பியால் தாக்கியதால் பூசகர் அந்த இடத்திலேயே சரிந்தார் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து பூசகரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவின் சேமிப்பகத்தை பிடிங்கிச் சென்று சந்தேக நபர்கள் மறைத்துள்ளனர்.

அந்த சேமிப்பகம் சந்தேக நபர்களின் தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், பூசகரின் உடமையிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்த சந்தேக நபர்கள் அதனை யாழ்ப்பாணம் நகருக்குச் சென்று பொருள்கள் வாங்கி வரும்படி பெண்கள் இருவரிடம் வழங்கியுள்ளனர்.

அதனால் அந்த பணத்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் நிறைவில் சந்தேக நபர்கள் 5 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் பூசகர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று (03) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூசகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் மற்றும் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here