ஆங்கிலம் தெரியாததால் இன்று 3 இலட்சம் ரூபாவை செலவிட்ட வடமாகாணசபை: வெளியில் வராத சங்கதி!

வடமாகாணசபையின் இன்றைய 130 வது அமர்வில் காற்றாலை ஒப்பந்தம் தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் திட்டமிட்ட ரீதியில் அவை நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதை இரண்டு தினங்களின் முன்னர் தமிழ்பக்கம் வெளிச்சமிட்டிருந்தது.

விவாதத்திற்கு எடுப்பதற்குரிய விவகாரமாக அது மாறுவதற்கு முன்னரேயே திட்டமிட்ட ரீதியில் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் சில ஆவணங்களையும், தகவல்களையும் நேற்றும், இன்றும் தமிழ்பக்கம் சேகரித்துள்ளது. தாம் தெரிவுசெய்த மாகாணசபை உறுப்பினர்களின் தகுதியையும், முதிர்ச்சியையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இன்றைய காற்றாலை விடயம் தொடர்பான முழுமையான விபரங்களை இங்கு இணைக்கிறோம்.

காற்றாலை ஒப்பந்தத்தின் பின்னணி

வடமாகாணசபையில் உள்ள கௌரவ உறுப்பினர்கள் இன்று அவைக்குள் தொண்டை கிழிய உரையாற்றியதை போல, வடமாகாண பிரதம செயலாளருக்கும்- தனியார் நிறுவனங்களுக்குமிடையில் குத்தகை ஒப்பந்தம் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை.

மத்திய அரசும், BETA POWER, JOULE POWER ஆகிய இரண்டு நிறுவனங்களும் மின்சார வழங்கலிற்கான இந்த ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் புலோப்பளையில் திட்டத்தை செயற்படுத்த, வணிக நிறுவனங்களின் சமூக கடப்பாட்டு நிதி (சிஎஸ்ஆர்) பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்றையே வடக்கு பிரதம செயலாளரும், அந்த நிறுவனங்களும் செய்து கொண்டுள்ளன. அந்த மின்உற்பத்தி நிறுவனங்கள் வடக்கு மாகாணசபைக்கு வழங்குவது குத்தகையல்ல. வடமாகாணசபையால் அதற்கான குத்தகையை கோர முடியாது. குத்தகையின் அளவை தீர்மானிப்பதும் மத்திய அரசுதான். நன்கொடை நிதி பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்ததால், வடக்கு விவசாய அமைச்சு நன்கொடை நிதி பெறுவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது.

ஆனால், இதன் பின் வடக்கில் இதேபோல செயற்படுத்தப்பட்ட பெரிய திட்டங்களான பூநகரி காற்றாலை திட்டத்திடமிருந்தும் மாகாண நிர்வாகம் நன்கொடை நிதி பெறலாம். ஆனால் இதுவரை அதை யாரும் செயற்படுத்தவில்லை. மாகாணசபையில் உள்ள விளக்கம் குறைந்த உறுப்பினர்கள், இதன் தார்ப்பரியத்தை புரியாமல் இது ஒரு மோசடி நடவடிக்கையை போல சித்தரிப்பதால் மாகாண அதிகாரிகளும் அப்படியான ஒப்பந்தங்களை செய்ய துணியவில்லை. உண்மையில் மாகாண நிர்வாகத்திற்கு இழப்பை ஏற்படுத்துவது, போதிய விளக்கம் இல்லாமலும்- தமது தனிப்பட்ட அரசியல் தேவைக்களிற்காக இதை கையிலெடுத்து பொய்யாக பேசும் உறுப்பினர்களே.

காற்றாலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள பிரதம செயலாளர்

2014 இல் இந்த காற்றாலை நிறுவனங்களுடன் முதலாவது ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது ஆளுனராக இருந்த சந்திரசிறி, நன்கொடை நிதியை ஆளுனர் செயலகம் ஊடாக கையாள்வார் என்பதற்காக பிரதம செயலாளரை தவிர்த்து, மாகாணசபையின் செயலாளர் ஊடாக சட்டவல்லுனரின் ஆலோசனையை பெற்று ஒப்பந்தத்தை செய்ய, முதலமைச்சர் அனுமதியளித்தார். எனினும், அது சட்டவலுவற்ற ஒப்பந்தமாக அமையும் என்பதால், அதை தவிர்த்து, பிரதம செயலாளர் ஊடாகவே ஒப்பந்தத்தை செய்யும்படி ஆளுனர் அறிவுறுத்தியதற்கமைவாக, சில மாத இடைவெளியில் பிரதம செயலாளர் விஜயலட்சுமி கையொப்பமிட்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இப்போது நடைமுறையிலுள்ளது பிரதம செயலாளர் கையொப்பமிட்ட, நன்கொடை பெறுவதற்கான ஒப்பந்தமே.

ஏன் விவாதத்திற்கு வந்தது?

இன்று மாகாணசபையில் இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, அங்கு உறுப்பினர்கள் பேசியதை அவதானித்தால்- மாகாணசபைக்கும், தனியார் நிறுவனத்திற்குமிடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது, விதிமீறல் நடந்தது போன்ற தோற்றம்தான் தெரிந்தது.

ஆனால் நடந்தது வேறு என்பதை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

மாகாணசபையின் நிகழ்ச்சி நிரலில் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டடிருந்தன. அவற்றில் சில-

i..இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வடக்கு பிரதம செயலாளரினால் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.

ii.இந்த செயற்றிட்டத்தின் மதிப்பிடப்பட்ட வருமானம், அல்லது செலவீனம் மாகாணசபையின் மதிப்பீட்டில் 2014ஆம் ஆண்டிலிருந்து உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

iii.இதன் சூழல் பாதிப்பு சம்பந்தப்பட்ட தரப்பினால் மதிப்பிடப்பட்டிருக்கப்படவில்லை.

மேற்படி மூன்றும் தவறான குற்றச்சாட்டுக்கள். பிரதம செயலாளரின் கையொப்பம் மேலே இணைக்கப்பட்டுள்ளது. 2014 இல் பொருளாக உள்ளடக்கப்பட்டிருந்தது. பின்னர், இந்த நன்கொடை பிரதம செயலாளரின் கணக்கிற்கே அனுப்பிவைக்கப்பட்டது. சபை கோரியதன் அடிப்படையில் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டு வருகிறது.

சூழல் பாதிப்பு தொடர்பான அறிக்கையும் தயாரிக்கப்பட்டிருந்தது. இதன் பிரதியையும் தமிழ்பக்கம் பெற்றுள்ளது என்பதை பொறுப்புடன் தெரிவித்து கொள்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூழ்முட்டை என அண்மையில் ஐங்கரநேசன் உரையாற்றியதற்கு பதிலடியாக இந்த விவகாரம் மாகாணசபைக்குள் திட்டமிட்டு புகுத்தப்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. ஏனெனில், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானங்கள் மாகாண கணக்காய்வுகுழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அது மொத்தமாக 38 பக்கங்களையுடையது. அதில் ஐங்கரநேசன் தொடர்புடைய பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டிருந்தது.

ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டு என்பதாலேயே, அது தவறானதென தமிழ்பக்கம் முடிவுசெய்து, இந்த பத்தியை தயாரித்திருக்கவில்லை. கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அவதானங்கள் முடிவுகள் அல்ல. மேலே தமிழ்பக்கம் சுட்டிக்காட்டியது உள்ளிட்ட பல குறைபாடுகள் அதில் உள்ளன. வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்- நிதி, இது தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார். செப்ரெம்பரில் மாகாண பிரதிநிதிகளும், மத்திய கணக்காய்வாளர் குழுவும் ஒன்றாக உட்கார்ந்து இவற்றை ஆய்வுசெய்ததன் பின்னர் வெளியிடப்படுவதே, உத்தியோகபூர்வ- விவாதத்திற்கு தகுதியான அறிக்கையாகும்.

அவைத்தலைவரின் பிழையான மொழிபெயர்ப்பு 

இன்று அரசியல் நோக்கத்துடன் விவாதம் செய்யப்பட்டது என்பதற்கான மேலும் சில ஆதாரங்களையும் தமிழ்பக்கம் இணைக்கிறது.

வடக்கு மாகாண பிரதம செயலாளரிற்கும், தனியார் காற்றாலை நிறுவனங்களிற்குமிடையில் செய்யப்பட்ட வணிக நிறுவனங்களின் சமூக கடப்பாட்டு நிதியை பெறுவதற்கான ஒப்பந்தத்தில், ஒரு பகுதியை மேலே இணைத்துள்ளோம்.

இன்றைய மாகாணசபை அமர்வின்போது, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த பகுதியை வாசித்து, அதை தமிழில் மொழிபெயர்த்தார். அவரது தமிழ் மொழிபெயர்ப்பில் “மாகாணசபையுடன் குத்தகை ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில்“ என குறிப்பிட்டிருந்தார். எனினும், “பார்ட் 1 (செயலாளர் விஜயலட்சுமி) பார்ட் 2, 3 (இரண்டு நிறுவனங்களும்) ஆகியன, குத்தகை அடிப்படையில் காணியை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களில் இருந்து தேவையான அனுமதிகளை பெற்றிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் (வணிக நிறுவனங்களிற்கான சமூகக் கடப்பாட்டு நிதியை பெறுவதற்கானது) கைச்சாத்திடப்படுகிறது“ என்பதுதான் அதன் சரியான விளக்கம்.

அவைத்தலைவர் ஆங்கிலம் தெரியாமல் அப்படி உரையாற்றினாரா அல்லது, வேண்டுமென்றே திரிவுபடுத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால் மாகாணசபைக்குள் அதிக பிரசங்கி தனமாக நடந்து கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவும் இந்த தவறான மொழிபெயர்ப்பை ஆமோதித்து அதனடிப்படையிலேயே விவாதம் செய்தார். அவரை தொடர்ந்து உரையாற்றிய சயந்தன், அஸ்மின் போன்றவர்களும் இதே தவறான மொழிபெயர்ப்பின் அடிப்படையிலேயே உரையாற்றினார்கள்.

பின்னர் இடைவேளையின் போது அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர், பொ.ஐங்கரநேசன், இ.ஜெயசேகரம், அ.பரஞ்சோதி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஒன்றாக உட்கார்ந்து மதியபோசனம் அருந்தினர். இதன்போது, ஆங்கில மொழிபெயர்ப்பு தவற்றை ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியதாக, அருகிலிருந்த இன்னொரு உறுப்பினர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

அவைத்தலைவர் பிழையாக மொழிபெயர்த்தார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் சற்று சங்கடத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும், பின்னர் தயக்கத்துடன் அவைத்தலைவரும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த உறுப்பினர் தெரிவித்தார்.

தனது ஆங்கில மொழிபெயர்ப்பு தவறென்பதை அவைத்தலைவர் இடைவேளையின் பின்னரும் அவையில் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தவறான மொழிபெயர்ப்பை வைத்து அஸ்மின், சயந்தன், லிங்கநாதன் போன்றவர்கள் தொண்டைத் தண்ணீர் வற்ற உரையாற்றி சம்பவம் குறித்தும் அவைத் தலைவர் பேசவில்லை.

கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்திற்கு நடைமுறையிலிருந்து நீக்கப்பட்ட முதலாவது ஒப்பந்தத்தை அனுப்பி, திணைக்களத்தையும், இன்றைய வடமாகாணசபை அமர்வையும் பிழையாக வழிநடத்தியது யார் என்ற விபரத்தை விரைவில் தமிழ்பக்கம் அம்பலப்படுத்தும்.

மொத்தத்தில் இல்லாத விவகாரம் ஒன்றிற்காக மூன்று இலட்சம் ரூபா செலவிட்டு ஒரு பெரிய விவாதத்தையே மாகாணசபை நடத்தி முடித்திருக்கிறது.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here