மாமாவை உதைத்த போலீஸார்; எவரிடமும் பேசக்கூடாது என மிரட்டியதாக ஹாத்தரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரது உறவினர் தகவல்

உத்திரப்பிரதேசம், ஹாத்தரஸின் கிராமத்தில் கூட்டு பலாத்காரத்தால் பலியான இளம்பெண் விவகாரம் தீவிரமடைகிறது. இப்பெண்ணின் மாமாவைப் போலீஸார் உதைத்து எவரிடமும் பேசக் கூடாது என மிரட்டியதாக அவரது உறவினர் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹாத்தரஸில் குவிந்துள்ள பத்திரிகையாளர்கள் வட்டாரம் கூறும்போது, ‘எனது மாமாவை உதைத்த போலிஸார், எவரிடம் பேசக் கூடாது என மிரட்டியதாக உறவினர்கள் எங்களிடம் தெரிவித்தனர். அப்பெண்ணின் குடும்பத்து உறுப்பினர்களின் கைபேசிகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன.’ எனத் தெரிவித்தனர்.

உ.பி.யின் மேற்குப்பகுதியின் ஹாத்தரஸில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் குவிந்துள்ளனர். இங்கு பாதிக்கப்பட்ட தலீத் பெண்ணின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு அவரது குடும்பத்தாரிடம் அரசியல்வாதிகளும், டெல்லி பத்திரிகையாளர்களும் நெருங்கி பேசி விடாமல் இருக்க அமர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அப்பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் முக்கிய சாலையில் இரும்பு தடுப்புகள் அமைத்து எவரும் போக முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் மீறி ஒரு இந்தி தொலைக்காட்சி செய்தி சேனலின் பெண் பத்திரிகையாளர் வயல்வெளி வழியாக அந்த வீட்டை நெருங்கினார். சுமார் 100 மீட்டர் தூரத்தில் இவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதன் முழுப்படக்காட்சியும் நேரலையில் பதிவாகி ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதில், அப்பெண் பத்திரிகையாளருடம் நடைபெற்ற வாக்குவாதம் ஹாத்தரஸ் போலீஸாரின் தவறான நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டியது.

இதையடுத்து, ஹாத்தரஸின் சண்ட்பா கிராமத்து காவல்நிலைய ஆய்வாளர், டிஎஸ்பி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலியான தலீத் பெண்ணிற்கு நியாம் கேட்டு போராட்டங்கள் வலுக்கின்றன.

கடந்த செப்டம்பர் 14 அன்று காலை சண்ட்பாவை சேர்ந்த 19 வயது தலீத் இளம்பெண், தனது தாய் மற்றும் சகோதரனுடன் புல்வெட்டச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கிராமத்தின் உயர்குடி சமூகத்தின் 4 இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்றனர்.

இது, அங்கிருந்து முன்னதாகக் கிளப்பிச் சென்ற சகோதரனுக்கும், சற்று தூரத்தில் இருந்த அவரது தாய்க்கும் தெரியாமல் இருந்துள்ளது. மற்றொரு வயலில் இருந்த வீட்டில் அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

பிறகு உண்மை வெளியில் தெரியாமல் இருக்க பெண்ணின் நாக்கை வெளியில் இழுத்து துண்டித்துள்ளனர். ஹாத்தரஸ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இருதினங்களுக்கு பின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வழக்கில் அக்கிராமத்தின் உயர் சமூகமான தாக்கூர் இளைஞர்கள் சந்தீப், ராமு, லவ்குஷ் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அலிகரில் 10 நாட்களுக்கு மேலாக முன்னேற்றம் இல்லாத நிலையில் அவர் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதற்கு அவரை அலிகர் சென்று தலீத் சமூக ஆதரவு ’ஆஸாத் சமூகக் கட்சி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத் சந்தித்ததும் காரணம். இவர் தனது ட்வீட்டரில் அப்பெண் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதன் மறுநாளே டெல்லிக்கு மாற்றப்பட்டவர் அங்கும் சிகிச்சை பலனின்றி அப்பெண் கடந்த மாதம் 29 இல் பரிதாபமாகப் பலியானார். இதன் பிறகு ஹாத்தரஸ் போராட்டக் களமாக மாறி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here