சின்னத்தம்பி பட குஷ்பூ பாணியில் பேஸ்புக்கில் காதலித்து ஏமாற்றிய யுவதி… சூட்சுமமாக பொலிஸ் நிலையம் அழைத்து சென்ற மாமியார்!

ஏற்கனவே திருமணமானதை மறைத்து பேஸ்புக் காதலனை மணமுடித்த யுவதி, சூட்சுமமாக பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரிற்கு பேஸ்புக் மூலம் யுவதியொருவர் அறிமுகமாகினார். தன்னை வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் என்றும், ஆனால் ஆண் நண்பர்கள் யாருமில்லாமல் வீட்டில் பொத்திப்பொத்தி வளர்க்கப்படுகிறேன் என சின்னத்தம்பி பட குஷ்பூ பாணியில் யுவதி பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

இருவரும் பேஸ்புக்கில் கடலை போட்டு காதலில் விழுந்துள்ளனர்.

இளைஞனிற்கு 21 வயது. யுவதிக்கும் அதே வயது. சில மாதங்கள் மூத்தவர்.

திடீரென ஒருநாள் குளியாப்பிட்டிக்கு வந்த யுவதி இளைஞனிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தினார். தமது பேஸ்புக் காதல் வீட்டில் தெரிய வந்து, தன்னை அடித்து துன்புறுத்தியபோது, வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி வந்ததாக தெரிவித்தார்.

வேறு வழியின்றி இளைஞன் தனது வீட்டுக்கு யுவதியை அழைத்து சென்றார்.

தனது வீட்டில் பேஸ்புக் காதலை பற்றி கூறிய காதலன், சில காலம் தமது வீட்டிலேயே பேஸ்புக் காதலி இருக்கட்டும் என கூறினார். எனினும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும், வீட்டுக்கு சென்றால் பெற்றோர் அடித்தே கொன்றுவிடுவார்கள் என யுவதி கண்ணீர் விட்டார்.

இதையடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்தனர். விரைவிலேயே பதிவுத்திருமணம் நடந்தது.

எனினும், யுவதியின் பின்னணி குறித்து ஆராய விரும்பிய இளைஞனின் தாயார், அம்பாறையிலுள்ள ஒரு உறவினர் மூலம் தகவலை திரட்டினார். அதன்போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அது குறித்த ஆவணங்களை திரட்டினார்.

திருமணம் முடித்து 13 நாட்கள் ஜோடி உல்லாசமாக இருந்தனர்.

அவர்களை வெளியூர் பயணம் ஒன்றிற்காக அழைத்து செல்வதாக கூறிய பெற்றோர் வாகனம் ஒன்றில் ஏற்றி வீட்டிலிருந்து புறப்பட்டனர். அம்பாறைக்கு சென்ற வாகனம் நேராக உகண பொலிஸ் நிலையத்திற்கு சென்றது.

பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சென்ற இளைஞனின் தாயார், பேஸ்புக் காதலி தம்மையும், தமது மகனையும் ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக முறையிட்டார். எனினும், யுவதி அதனை மறுத்தார்.

இதன்போது, யுவதியின் விவாரத்த வழக்கு, திருமண பதிவு சான்றிதழ் என குறிப்பிட்டு ஆவணங்களை இளைஞனின் தாயார் கையளித்தார்.

இதனால் ஆடிப்போன யுவதி நடந்தவற்றை ஒப்புக் கொண்டுள்ளார்.

யுவதியின் குடும்பம் மிக ஏழ்மையானது. யுவதியின் தந்தையார் வீட்டைவிட்டு வெளியேறி எங்கோ சென்று விட்டார். யுவதியின் தாயார் மூளையில் ஏற்படும் இரத்தக்கசிவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மத்திய முகாம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிகிச்சை பெற்று வருகிறார்.

யுவதிக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே கணவர், விவாகரத்து கோரி அம்பாறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இவை அனைத்தையும் யுவதி ஒப்புக்கொண்டார். இதையடுத்து யுவதியை பொலிசார் எச்சரித்தனர்.

இளைஞன் கண்ணீருடன், யுவதியை தன்னால் பிரிந்து வாழ முடியாது, விவாகரத்து வழக்கை விரைவாக முடித்ததும் அவரை அழைத்துச் செல்வேன் என பொலிஸ் நிலையத்தில் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

தமது மகனிற்கு இரண்டு குட்டு குட்டி அவரை பெற்றோர் மீண்டும் வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். அத்துடன், அந்த வாகனத்திலேயே பேஸ்புக் காதலியையும் அழைத்து சென்று, மத்தியமுகாம் பகுதியிலுள்ள தாயிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here