அங்கஜனும், வியாழேந்திரனும் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்களென்பது நிரூபணமாகி விட்டது: முன்னாள் போராளிகள் கண்டனம்!

நேற்றைய தினம் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல திலீபன் தொடர்பிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலும் தெரிவித்த கருத்துக்களுக்கு பெரும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அவர் கருத்துக்கள் சொல்லும் போது அவர் பக்கத்தில் இருந்த தமிழ் பிரதிநிதிகள் பதவிக்காக மௌனிகளாக புன்சிரிப்புடன் இருந்தமைதான் எமது இனத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாக அமைந்தது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாகி திலீபன் ஒரு பயங்கரவாதியெனவும், அவரை போதைப்பொருள் ஆட்களுடன் இணைத்துப் பேசுவதென்பதும் நொந்து கிடக்கும் எமது மக்களை மேலும் நோகடித்து எமது வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடகவே எம்மால் பார்க்க முடிகின்றது.

அத்துடன் காணாமல் போனவர்கள் பற்றிக் குறிப்பிட்ட கருத்தானதும் எமது உறவுகளை வஞ்சிக்கின்றது. எமது மக்கள் இறுதி யுத்தத்தின் போது அவர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பிலேயே கேட்கின்றார்கள். யாரும் அவர்கள் உறவுகளைத் தொலைத்தவர்கள் அல்ல. தாங்கள் இராணுவத்திடம் ஒப்படைத்த உறவுகள் எங்கே என்றுதான் கேட்கின்றார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் வெவ்வேறு விடயங்களைச் சுட்டிக் காட்டி எமது மக்களின் கண்ணீரைக் கொச்சைப்படுத்த நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்.

கெஹலிய ரம்புக்வெல அவர்கள் இன்று நேற்றல்ல இறுதி யுத்தம் நடைபெறும் போதும் கூட அவரது துவேச கருத்தக்களைக் கக்கிக் கொண்டே இருப்பவர். அவரிடம் நடுநிலையான கருத்துக்களை எதிர்பாப்பதென்பது நடவாத காரியம் தான். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக, இந்தியப் பாதுக்காப்புப் படையின் அக்கிரமத்திற்கு எதிராக அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து இன்னுயிரை நீத்த தியாகத்தையும், போதைப்பொருள் கடத்தல் காரர்களையும் தொடர்புபடுத்தி கருத்துக்கள் வெளியிடுவதென்பது தமிழ் மக்களின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் செயலாகும். இதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு சிங்கள அரசியல்வாதிதான் அவ்வாறு சொல்கின்றார் என்றால் முழுக்க முழுக்க தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இதனைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருப்பதானது அவர்களின் ஈனத்தனத்தையே வெளிக்காட்டுகின்றது. பதவி தருகின்றார்கள் என்றால் எமது இனத்தின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் அளவிற்கும் செல்வார்களா என்பது இவர்களைப் பார்க்கும் போது தான் தெரிகின்றது.

மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீது கொண்ட சிறு அதிருப்தியின் காரணமாக வேறு வழியில்லாமல் இவர்களைத் தெரிவு செய்தர்களே தவிர இவர்கள் மீது கொண்ட அதீத பற்றுக் காரணமாகவல்ல. ஆனால் இவர்கள் இதனைக் கொண்டு எமது மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற விடயங்களுக்கு எதிர்த்தும் அபிவிருத்தி விடயங்களில் ஆதரித்து செயற்படுவார்கள் என்று பார்த்தால். கெகலிய சொல்லும் போது அவரின் இருபுறமும் இருந்து கொண்டு நகைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறானவர்களை மக்கள்தான் இனங்கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் போன்றோருக்குத் தானா நாங்கள் வாக்களித்தோம் என்று அவர்களுக்கு வாக்களித்த ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். அந்த நிலையைத் தான் அவர்கள் இன்று ஏற்படுத்திவிட்டார்கள். அமைச்சர் இவ்வாறு சொல்லும் போது ஒரு வார்த்தையேனும் அதனை மறுதளித்துப் பேசுவதற்குக் கூட வக்கில்லாமல் பதவி அவர்கள் கண்ணை மறைத்து விட்டது.

இதனை ஒருபோதும் முன்னாள் போராளிகளாகிய நாங்கள் பாhத்துக் கொண்டிருக்க முடியாது. ஏதோவொரு வகையில் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆண்டாண்டு வந்த அரசாங்கங்களே காரணமாகியிருந்திருக்கின்றன. அத்தகு நிலையில் சொந்த மண்ணிலே எமது உரிமைக்காக போராடிய ஒவ்வொரு தமிழ் மகனும் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர்களே. அதனை எவரும் தடுக்க முடியாது.

அபிவிருத்தியுடன் சேர்த்து மக்களின் உரிமைக்காவும் குரல் கொடுப்போம் என்று மக்களிடம் வாக்குக் கேட்ட அரசுடன் சேர்ந்திருக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான எதேட்சிகாரத்திற்கு இன்னும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அது தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மக்களின் பிரச்சினைகளை விட அவர்களின் பதவிகளைத் தக்க வைப்பதற்கு என்ன வேண்டுமோ அதனையே அவர்கள் செய்து வருகின்றார்கள்.

எனவே நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் மட்டுமல்ல அமைச்சருடன் அருகில் அமர்ந்திருந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து எமது போராட்டத்தையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here