நாங்கள் இப்போது எம்.பி… போன் பேச முடியாது… பயங்கர ‘பிஸி’: கஜேந்திரன் எம்.பி!

தமிழ் தேசிய கட்சிகள் கடந்த சில தினங்களின் முன்னர் மீண்டும் யாழில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது, கட்சி தலைவர்கள் விரைவில் சந்தித்து பேசுவதென முடிவானது.

எதிர்பார்த்ததை போலவே இந்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை.

அந்த சந்திப்பிற்கு முதல்நாளிலிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள ஏற்பாட்டாளர்கள் முயன்றனர். முடியவில்லை.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் மண்டபத்திலிருந்து தொடர்பு கொண்டனர். கூட்டம் முடிந்த பின் தீர்மானங்களை அறிவிக்க தொடர்பு கொண்டனர். எனினும், இருவரும் பதிலளிக்கவில்லை.

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுதிரண்டு நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளவதென தீர்மானித்தபோது, ஆரம்ப கட்டத்தில் முன்னணி முரண்டு பிடித்தது. அப்போதும் பலமுறை முன்னணியின் இரண்டு தலைவர்களையும் கூட்டமைப்பின் பல பிரமுகர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். பதிலில்லை.

ஒருவர் அழைத்தால் பதிலளிக்க முடியாத நிலையில் இருந்தால் பின்னர் அழைத்து பேசும் அடிப்படையான நாகரிகம் கூட தெரியாமல் இருவரும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.

எனினும், அவர்களின் நகர்வு கோட்டாபய ராஜபக்ச சார்புடையதாக அமைகிறது- நினைவேந்தல் தடையை ஆதரிக்கிறார்கள்- என்ற அபிப்பிராயம் பொதுமக்களிடம் ஏற்பட தொடங்கியதையடுத்து, கடைசிக்கட்டத்தில் முன்னணியும் போராட்டத்தில் ஒட்டிக் கொண்டது.

அவ்வளவுதான். அதன் பின்னர் இப்பொழுது தொலைபேசி அழைப்புக்களிற்கும் பதிலில்லை.

இதேவேளை இன்னொரு சுவாரஸ்ய சம்பவம்.

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சாவகச்சேரி சிவன் கோயிலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டம் ஆரம்பித்த பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செ.கஜேந்திரனும் அங்கு வந்தனர். அவர்கள் உட்கார்ந்திருந்ததற்கு பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது, இளைஞர்கள் தரப்பில், “ஏன் ஒற்றுமையை முயற்சியை விரும்பவில்லை. தொலைபேசி அழைப்புக்களிற்கும் ஏன் பதிலளிக்காமல் இருக்கிறீர்கள்“ என கேட்கப்பட்டது.

அப்போது செ.கஜேந்திரன்- “நாங்கள் இப்போது எம்.பிக்களடாப்பா. பயங்கர பிஸி. கதைக்க நேரமில்லை“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here