எக்னொலிகொட வழக்கில் கைதானவர்களை தடுத்து வைக்க இடப்பட்ட மைத்திரியின் கையெழுத்து போலியானதா?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைத்து விசாரிப்பது தொடர்பான உத்தரவில் அப்போதைய ஜனாதிபதியின் பெயரில் இடப்பட்ட கையொப்பம் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கும் ஆவணத்தில் இடப்பட்டுள்ளது முன்னாள் ஜனாதிபதியின் கையொப்பமா என்பதை ஆராய, முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பெயரில் இடப்பட்ட கையொப்பம் போலியானது, அது ஜனாதிபதி இடவில்லை, அரசியல் நோக்கத்திற்காக தாம் தடுத்து வைக்கப்பட்டோம் என செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்தபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அசல் கையொப்பத்திற்கும் தொடர்புடைய தடுப்புக்காவல் உத்தரவில் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கும் இடையே கடுமையான முரண்பாடு இருப்பதாகவும் ஆணைக்குழு தலைவர் கூறினார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்தை உறுதிசெய்ய ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு மைத்திரியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்னவுக்கு அழைப்பாணை அனுப்ப ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்னே நேற்று உத்தரவிட்டார்.

ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அசல் கையொப்பத்துடன் ஒரு ஆவணத்தை சுட்டிக்காட்டி, இது மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பம் என்று கூறினார்.

தடுப்புக்காவல் உத்தரவை சிஐடியால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டதா என்பதல்ல, ஜனாதிபதி அதில் கையெழுத்திட்டாரா என்பது கேள்வி. எனவே, சரியான உண்மைகளை அறிய, ஒரு ஒப்பீடு செய்யப்பட வேண்டும் என்று ஆணைக்கழுவின் தலைவர் கூறினார்.

மேலதிக விசாரணை ஒக்டோபர் 14 ஆம் திகதி இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here