ஆயர் இல்லத்தின் தலையீட்டினால் முருங்கன் பாடசாலை அதிபர் இடமாற்றம்: பாடசாலையை பூட்டி போராட்டம்!

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரி மன்னார் ஆயர் இல்லத்தின் தலையீடு காரணமாக வங்காலை பாடசாலைக்கு மன்னார் வலயகல்வி பணிப்பாளரினால் இடமாற்றம் செய்துள்ளமையினை கண்டித்து குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்றைய தினம் வெள்ளி கிழமை (2) காலை மீண்டும் பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபரான அருட்சகோதரி பாடசாலையில் கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில் திடீர் என வேறு ஒரு பாடசாலைக்கு இடமாற்றியுள்ளமையினால் குறித்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வலயக்கல்வி பணிமணையினால் எதிர் வரும் 2 ஆம் திகதி குறித்த பாடசாலை அதிபரை வங்காலை பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று செல்ல கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை இரண்டாவது தடவையாக இடம் பெற்றது.

பெற்றோர் பாடசாலைக்கு முன் ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது முருங்கன் பொலிஸார் மக்களை அச்சுரூத்தும் முகமாக கலகம் அடக்கும் பொலிஸாரை கொண்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயகல்வி பணிப்பாளர் பிறட்லி ஆயர் இல்லத்துடன் பொது மக்களை சென்று கலந்துரையாடுமாறு தெரிவித்தார்.

அதை ஏற்காத பெற்றோர் நீதியான பதிலை வலய கல்வி பணிமனை வழங்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

உரிய தீர்வு கிடைக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்ததுடன் பாடசாலையை மூடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here