19 சட்டத்தரணிகள் ஆஜர் …மன்றில் பதிலளிக்க முடியாமல் திண்டாடிய பொலிசார்: திலீபன் அஞ்சலியில் கூட்டமைப்பு பிரமுகர்களிற்கு எதிரான பொலிசாரின் வழக்கு நிராகரிப்பு!

தியாகி திலீபன் நினைவேந்தலிற்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரமுகர்கள் சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ஜனநாயக போராளிகள் கட்சியின் நகுலேஸ் ஆகியவர்களிற்கு எதிராக, மட்டக்களப்பு பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்த அவர்கள் திட்டமிட்டதாக பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, 6 பேரையும் இன்று மன்றில் முன்னிலையாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று 6 பேரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். அவர்களிற்காக 19 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணங்களை செய்தார்.

பொலிசார் கற்பனையில் வழக்கு தாக்கல் செய்யலாமா? மேலிட அழுத்தம் காரணமாக ஆதாரமில்லாத வழக்கு தாக்கல் செய்யலாமா என பொலிசாரிடம் கேள்வியெழுப்பிய சுமந்திரன், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது ஆதாரமற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

எம்.ஏ.சுமந்திரனின் கேள்விகளால் திண்டாடிய பொலிசார் மன்றில் பதிலளிக்க முடியாமல் மௌனமாக நின்றனர்.

ஆதாரமில்லாமல் பொலிசார் சோடித்த வழக்கை நிராகரிக்க வேண்டுமென பிரதிவாதிகள் தரப்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை நிராகரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here