ட்ரம்ப், மனைவிக்கு கொரானா தொற்று!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தத் தகவலை ட்ரம்ப் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 இலட்சத்து 94 ஆயிர்தது 671 பேர் கொரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.

அமெரிக்காவில் தீவிரமாககொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலம் வந்தார். இந்நிலையில் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் ருவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ சிறிய இடைவெளிகூட இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிய எனது ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும், எனது மனைவியும் கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். இப்போது இருந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சில மணிநேரங்களில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் ருவிட்டரில் பதிவிட்ட கருத்தில் தனக்கும், தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அவர் பதிவிட்ட கருத்தில் “எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களின் தனிமைப்படுத்தும் பணியைத் தொடங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக ட்ரம்ப் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருப்பது அவரின் வெற்றியை கடுமையாக பாதிக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும், ஜனாதிபதி ட்ரம்ப்பும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை ஜனாதிபதி ட்ரம்ப் சரியான முறையில் கையாளவில்லை, அதிகமான மக்கள் உயிரிழக்க காரணமாகிவிட்டார் என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரி்ஸ் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருப்பது குற்றச்சாட்டை மேலும் வலுவாக்கும்.

அமெரிக்க அரசைப் பொறுத்தவரை ஜனாதிபதியாக இருப்பவர் செயல்படாத சூழலில் இருக்கும் போது, அதாவது தனிமைப்படுத்துதல், நோய்வாய்படுதல் போன்றவற்றில் இருக்கும் போது, ஜனாதிபதி பணியை, அதிகாரத்தை துணை ஜனாதிபதி ஏற்பார். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் அமெரிக்க அரசு வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here