தமிழர் விடுதலை கூட்டணியின் உள்வீட்டு மோதல் பொலிஸ் நிலையம் வரை சென்றது: மாவை மகனிற்கு எதிராகவும் முறைப்பாடு!

தமிழர் விடுதலை கூட்டணியின் உள்வீட்டு மோதல் இப்பொழுது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை பதவியை கைப்பற்ற, ச.அரவிந்தன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதுவரை ஆனந்தசங்கரி தரப்பில் இருந்த கட்சி பிரமுகர்கள் சிலரை, அவர் வளைத்து போட்டுள்ளார்.

தனக்கு எதிரான ச.அரவிந்தனுடன் கட்சி பிரமுகர்கள் சிலர் பணத்திற்காக இணைந்துள்ளதாக ஆனந்தசங்கரி தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.

தமிழர் விடுதலை கூட்டணியில் மூத்த உப தலைவர் என ச.அரவிந்தன் தன்னை விளித்துக் கொண்டாலும், கட்சிக்குள் அப்படியொரு பதவிநிலையே கிடையாது, அரவிந்தன் ஓவர் பில்ட் அப் செய்து கொள்கிறார் என ஆனந்தசங்கரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

கட்சி தலைமையை கைப்பற்ற அரவிந்தன் தலைகீழாக நிற்க ஆரம்பித்ததை தொடர்ந்து, அந்த அணியினர் முன்னாள் யாழ்ப்பாண மேயர் சிவபாலனின் நினைவுதினத்தை அனுட்டிக்க தீர்மானித்தனர். அதற்கு இடமளிக்காமல் ஆனந்தசங்கரி கட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு கொழும்பு சென்று விட்டார்.

பூட்டப்பட்ட அலுவலக வாயிலில் நினைவு நிகழ்வு நடந்ததுடன், கட்சியின் உள்வீட்டு மோதல் வௌிச்சத்திற்கு வந்தது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ச.அரவிந்தனிற்கும், மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனிற்குமிடையில் ஒரு சந்திப்பு நடந்தது. தமிழ் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் திரைமறைவில் செயற்பட்டு வரும் கலையமுதன், அரவிந்தனை சந்தித்து பேசியிருந்தார்.

தான் இல்லாத நேரம், தனது அலுவலகத்திற்குள் நுழைந்தது சட்டவிரோதமானது, தனக்கு தீங்கிழைக்கும் நோக்கமுடையது என ஆனந்தசங்கரி தரப்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நிற்காமல், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆனந்தசங்கரியினால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here