மாகாணசபை தேவையா என்பதை நாமே தீர்மானிப்போம்; இந்தியா மூச்சுக்காட்டக்கூடாது: வீரசேகர வீராப்பு!

மாகாணசபை முறைமை நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவிசாவளை பாதுக்கை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் மாகாண சபைகளை தொடர்ந்து கொண்டு செல்வதா இல்லையா என்பது எமது நாட்டின் உள்விவகாரமாகும். அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டி இருப்பது எமது நாட்டின் ஜனாதிபதியாகும். அவ்வாறு இல்லாமல் வெளிநாடுகளின் பிரதமர்கள் அல்ல. மாகாணசபைகளை தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும் என இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

இலங்கை சுயாதீன, இறையாண்மையுள்ள நாடு. அதனால் எமக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவுக்கு முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமே 13 ஆம் திருத்தம் எமது அரசியலமைப்புக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை மாகாணசபை முறையை தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டும் என்றே இந்திய தரப்பினரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவினால் மேற்கொள்ள வேண்டிய பல நிபந்தனைகள் இருந்தன. அதில் ஒன்றுதான் விடுதலை புலிகளை நிராயுதபாணிகளாக்குவதாகும். ஆனால் இறுதிவரை புலி பயங்கரவாதிகள் நிராயுத பாணியாகவில்லை. இந்தியாவுக்கும் அதனை மேற்கொள்ள முடியவில்லை. அதனடிப்படையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் எந்தளவுக்கு பாதிக்கின்றது என்பதில் கேள்வி எழும் என்றும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here