ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார்

உத்தரப்பிரதேசம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உ.பி. போலீஸார் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தியை முரட்டுத்தனமாக பிடித்து போலீஸார் தள்ளியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், நேற்று அதிகாலை தகனம் செய்தனர்.

இந்நிலையி்ல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து இன்று ஹத்ராஸ் புறப்பட்டனர்.

ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்ற காரை மாவட்ட அதிகாரிகள், போலீஸார் மறித்தனர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடக்கத் தொடங்கினர்.

அப்போது ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் போலீஸார் எச்சரிக்கையை மீறி நடக்கத் தொடங்கினர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் நடந்தனர்.

ராகுல் காந்தியை தொடர்ந்து நடக்காத வகையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டதால், போலீஸார் ராகுல் காந்தியை தள்ளிவிட்டனர். இதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார்.

அதன்பின் போலீஸார் ராகுல் காந்தியிடம் கைது செய்வதாக தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி போலீஸாரிடம், “எதற்காக என்னை கைது செய்கிறீர்கள். எந்தச் சட்டத்தில் கைது செய்துகிறீர்கள். இப்போதுதான் என்னை போலீஸார் பிடித்து தள்ளினார்கள். தாக்கினார்கள், கீழே தள்ளினார்கள். நான் கேட்கிறேன். இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடக்க வேண்டுமா. சாமானிய மனிதர் நடக்கக் கூடாதா. எங்கள் வாகனத்தை மறித்தீர்கள், அதனால் நடக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், 144 தடை உத்தரவு தடையை மீறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் நடக்கத் தொடங்கியதால் அவர்கள் இருவரையும் போலீஸார் ஐபிசி பிரிவு 188ன் கீழ் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here