பதவிக்காக மன்றாடிய கஜேந்திரகுமார், கஜேந்திரன்…. தேர்தல் நேரம் சதி… சத்தியம் செய்ய மறுத்த கஜேந்திரன்; முன்னணிக்குள் நடக்கும் அசிங்கங்கள்: அம்பலப்படுத்தும் மணிவண்ணன்!

இரும்புத்திரையினால் மூடப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள நடக்கும் மோசடிகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், குடும்ப ஆதிக்கம், சுயமாக சிந்திக்க முடியாத தொண்டர்களை உருவாக்கும் கலாச்சாரம் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வி.மணிவண்ணன் வெளியிட்டுள்ளார்.

கொள்கையடிப்படையில் செயற்படுவதாக கூறினாலும், பதவி வெறியினால் கட்சிக்குள் செயலாளர் செ.கஜேந்திரன் மேற்கொண்ட சதி முயற்சிகள் பற்றிய பல தகவல்களையும் வெளிப்படுத்தினார்.

எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு விலகாமல், கட்சியை ஜனநாயக மயப்படுத்தி, கொள்கையடிப்படையில் செயற்படும் அமைப்பாக மாற்றவுள்ளதாகவும் சூளுரைத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் கிரீன் கிராஸ் விடுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2010ஆம் ஆண்டில் இந்த அரசியல் இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து, அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட முதலாவது நபர் நான்தான். வேறுயாரையும் கட்சியை விட்டு நீக்கவில்லை. பாரதூரமான குற்றமிழைத்தவர்கள், கட்சியின் தீர்மானத்தை மீறியவர்களை கூட நீக்கவில்லை. இப்பொழுது என்னை நீக்குவதாக சொல்லப்பட்டுள்ளது.

5.9.2020 திகதியிட்ட கடிதத்தில் என் மீதான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, விளக்கம் கோரியதுடன், விசாரணையில் யார்யாரை சாட்சிகளென குறிப்பிட்டு 9 உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

என்னை நீக்குவதாக அவர்கள் முடிவெடுத்த பின்னர் கண்துடைப்பிற்கு அவர்கள் மேற்கொள்ளும் விசாரணையை ஏற்றுக்கொண்டு, அந்த விசாரணையை மக்கள் மன்றத்தில் நடத்த கோரினேன். அத்துடன் 37 சாட்சி ஆவணங்களையும் இணைத்திருந்தேன்.

ஆனால், இப்பொழுது- விசாரணையே தேவையில்லை, உங்களை நீக்குகிறோம் என கடிதம் அனுப்பியுள்ளனர். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாதென்பதால் அந்த முடிவை எடுத்தார்கள்.

அத்துடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டையும் சுமத்தியிருந்தேன். ஒருவர் அல்லது இருவரின் விருப்பத்திற்கு அமைய இந்த அமைப்பு செயற்பட முடியாது. அவர்களின் பின்னால் மற்றவர்கள் இழுபட முடியாது. கட்சியை ஜனநாயக பண்புமிக்கதாக- பலரதும் நிலைப்பாட்டை உள்வாங்கக் கூடியதாக மாற்ற வேண்டுமென நான் வலியுறுத்தியது அவர்களால் பொறுக்க முடியவில்லை. 2018 இன் பின் தனிநபர் சர்வாதிகாரம் கட்சிக்குள் அதிகரித்தது. ஒரு சிலரது விருப்பத்தின்படிதான் கட்சி இயங்க வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். நான் முட்டுக்கட்டையாக இருப்பதால் பிரச்சனை வெடித்தது.

ஒருவர் அல்லது இருவர் நினைப்பதன்படி ஏன் நடக்க வேண்டுமென கேட்டபோது- உங்களிற்கு அனுபவம் காணாது என்பது.

2010இல் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய போது, இரா.சம்பந்தன் தன்னிச்சையாக நடக்கிறார், மற்றவர்களின் கருத்தை கேட்கவில்லையென குற்றம்சாட்டப்பட்டது. இப்பொழுது அதேவிதமாகவே முன்னணி நடக்கிறது.

கட்சிக்கு நிதி வழங்குபவர்கள்- கட்சிக்குள் நிதி மோசடி நடப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்தன. உள் விவகாரங்களை வெளியில் சொல்ல தேவையில்லை, ஆனால் இதை கட்சிக்குள் இல்லாமல் செய்து, தூய்மையான கட்டமைப்பை உருவாக்க ஒரு நிதிப்பிரிவை உருவாக்க முயற்சித்தேன்.

அதையும் ஒரு சிலர் விரும்பவில்லை. என் மீதான நடவடிக்கைக்கு அதுவும் ஒரு காரணம்.

கட்சியை ஜனநாயக பண்பற்றதாகவும், நிதி விவகாரத்தில் சீரான தன்மையற்றதாகவும் வைத்திருக்க முயற்சிக்கிறார்கள்.

எனது தனிப்பட்ட பணத்தை கட்சிக்கு வழங்கியுள்ளேன். கட்சியின் கடன் அழைப்பதற்கு பணம் வழங்கியுள்ளேன். எனது உழைப்பு நேரத்தை கட்சி வளர்ச்சியில் அர்ப்பணித்தேன்.

2010 இல் கட்சி செயற்பாட்டை ஆரம்பித்தபோது, என்னுடன் இணைந்த இளைஞர்களே கட்சியை வளர்த்தன. நான் முன்னெடுத்த சமூக செயற்பாடும் அதில் முக்கிய பங்கு வகித்தது.

இன்று கஜேந்திரகுமார், கஜேந்திரனுக்கு என்னுடன் சேர்ந்த பயணிக்க முடியாதென்றால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பலியிட கூடாது. அது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான கட்சி. 2010, 2012 காலகட்டங்களில் கட்சி கட்டமைப்பை நானே உருவாக்கினேன். கட்சி கட்டமைப்பை உருவாக்க வேண்டாமென கஜேந்திரகுமார் தெரிவித்த போதும், அவர் அதை மறுத்தார். நான் பலமுறை போராடியும் பலனிருக்கவில்லை.

கட்சி கட்டமைப்பை உருவாக்கி, பலரை உள்ளீர்த்தால் கட்சி தலைமைத்துவத்திற்கு ஆபத்துள்ளது , எனக்கு இதில் நீண்ட அனுபவம் உள்ளதென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தனது தாத்தாவை போல தன்னையும் தூக்கியெறிவார்கள் என்றார்.

இல்லையென நான் மறுத்து, அவரது தலைமைத்துவத்தை பாதுகாக்கும் சில ஏற்பாடுகளை செய்யலாமென கூறி, அவருக்கு உத்தரவாதங்களை கொடுத்தேன். உத்தரவாதங்கள், எனது திட்டங்களில் திருப்தியடைந்த பின்னரே, கட்டமைப்பை உருவாக்குங்கள் என்றார்.

நான் கட்சி உறுப்பினர்களை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் உறுப்பினர்கள் சென்று கேட்டபோது அவர்களுடன் சண்டைக்கு போகிறார்கள். அதனால் ஏராளமான கட்சி உறுப்பினர்கள் விரக்தியடைந்துள்ளனர். என்னை நீக்குவது தனியே மணிவண்ணனை நீக்குவதல்ல. கொள்கை வெல்ல வேண்டுமென எம்மோடு அணி திரண்டவர்கள், எங்களுடனுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை நீக்குவதாகவே அமையும்.

தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து என்னை நீக்குவதாக கட்சி கடிதம் அனுப்பியிருந்தது. அது ஏன் என்பதை விளக்குகிறேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி கட்சிக்குள் பல குழப்பங்கள் நிலவியது. அப்போது, தனிப்பட்ட காரணங்கள் மற்றும் சில காரணங்களினால் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டேன், ஆனால் கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்பதை கூறினேன். ஆனால் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் அதற்கு உடன்படவில்லை. நான் எப்படியும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென என்னிடம் மன்றாடினார்கள். கட்சி உறுப்பினர்கள், எனது உறவினர்களை சந்தித்து எப்படியாவது மணிவண்ணனை போட்டியிட வையுங்கள் என சொல்லுங்கள், மணிவண்ணன் போட்டியிடாவிட்டால படுதோல்வியடைந்து விடுவோம், அவரை போட்டியிடுமாறு சொல்லுங்கள் என எல்லா உறுப்பினர்களிடமும் கேட்டார்கள். உறுப்பினர்கள் என்னில் கோபித்தார்கள். நீங்கள் கட்டியெழுப்பிய அமைப்பில் போட்டியிடவில்லையா என கேட்டார்கள். நான் போட்டியிடாததால் எனது கட்சி தோல்வியடைய கூடாதென்பதற்காக வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை இணைக்க சம்மதித்தேன்.

கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் மிக மன்றாட்டமாகத்தான் என்னிடம் கேட்டார்கள்.

நான் கொள்கையில்லதவனாக, கொள்கை தெரியாதவனாக 10 வருடம் இயங்கியிருந்தால் ஏன் என்னிடம் மன்றாட வேண்டும்?. சம்பந்தன் கொள்கையை கைவிட்டு விட்டார் என சொல்லி பிரிந்தோம், விக்னேஸ்வரன் கொள்கையின் பிரச்சனையுள்ளது என கூறி ஒன்றுசேர மறுத்தோம், ஆனால் மணிவண்ணனின் கொள்கையில் பிழையுள்ளது என்றாலும் கெஞ்சினோம். கொள்கையில்லாதவர் என்றால் ஏன் கெஞ்ச வேண்டும்? என்னை விரட்டியல்லவா விட்டிருக்க வேண்டும்.

கொள்கை என்னவென்பதில் எனக்கு மிக தெளிவுள்ளது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதுதான் தமிழர்களின் கொள்கையென்றால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 1978ஆம் ஆண்டு ஜனாதிபதி முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னரே இனப்பிரச்சனையென்பது பூதாகரமாக இருந்தது. 1976 ஆண் ஆண்டே தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதல்ல தமிழர்களின் கொள்கை. எனக்கு கொள்கை தொடர்பில் யாரும் வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை.

வேட்புமனுவில் கையெழுத்திட்ட அன்று, வேட்பாளர்களிற்கிடையிலான சந்திப்பு நடந்தது. அப்போது- கொள்கைக்கான கூட்டணி, ஆசனத்திற்காக சிறுமைப்படுத்தக் கூடாது, கொள்கையையும், சைக்கிள் சின்னத்தையும் முன்னிலைப்படுத்தி போட்டியிட வேண்டும், எந்தவொரு வேட்பாளரின் விருப்பு வாக்கிலக்கத்தையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றேன்.

அத்துடன் 10 வேட்பாளர்களும் இணங்க வேண்டும், ஒரு ஆசனம் கிடைத்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், இரண்டு ஆசனம் கிடைத்தால் செ.கஜேந்திரனும், மூன்று ஆசனம் கிடைத்தால், மற்றையவர்கள் சுழற்சி முறையில் ஆசனத்தை பகிரலாம், எனக்கு அந்த ஆசனம் தேவையில்லையென ஒரு கோரிக்கையையும் முன்வைத்தேன். ஆனால் அது ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது. காரணம், பலர் கட்சி வெற்றியடைந்த பின்னர் போட்டியிட முன்வந்தவர்களிற்கு பதவி ஆசை, பாராளுமன்ற ஆசை வந்திருக்க கூடும். ஆனால் நாம் கொள்கைக்காக செயற்பட்டவர்கள் தேர்தலில் தோல்வியடைவோம் என தெரிந்தும் போட்டியிட்டவர்கள்.

பின்னர் தேர்தல் காலத்தில் மோசமான- அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டனர். எனக்கு எதிராக அவதூறு பரப்பும் நடவடிக்கையில், தோற்கடிக்க வேண்டுமென்ற முனைப்பில் பதவி வெறியர்கள் செயற்பட்டனர். எனக்கு வேலை செய்யக்கூடாதென உறுப்பினர்களை தடுத்தார்கள். நான் ரோவிடம் பணம் வாங்கி தேர்தலில் போட்டியிடுவதாக அருவருக்கத்தக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

அதன் உச்சம், தேர்தல் முடிந்த அன்று இரவும் நடந்தது. தேர்தல் முடிந்த பின்னர் நானும், நண்பர் சட்டத்தரணி அர்ஜூனாவும் தலைவர் கஜேந்திரகுமாரை சந்தித்து, ஏன் இப்படியான கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டீர்கள் என்றேன். அப்படி யாருமே செயற்படவில்லை. அது பொய் என்றார்.

“அது பொய்யான செய்தி மணி. இது என்னையும் உன்னையும் பிரிக்க, கட்சி தலைமையை சிதைக்க யாரோ உன்னிடம் பொய் சொல்கிறார்கள்“ என்றார்.

அது பொய் எனில், சொன்னவர்களை உங்களிடம் அழைத்து வருகிறேன்.எனக்கு வேலை செய்ய வேண்டாமென கட்சி செயலாளர் கஜேந்திரனால் சொல்லப்பட்டதாக கூறியவர்களை அழைத்து வருகிறேன் என்றேன்.

இல்லை. என்னையும், உன்னையும், கஜேந்திரனையும் பிரிக்க பொய் சொல்வார்கள். அதை நம்பாதே என்றார்.

தேர்தல் காலத்தில் செ.கஜேந்திரன் எனக்கு எதிரான சதி செயற்பாட்டில் ஈடுபடவில்லையென்றால், அவரை மறுக்கச் சொல்லுங்கள். அவரது பிள்ளையின் மீது சத்தியம் செய்யச் சொல்லுங்கள் என்றேன். செய்ய முடியாது என்றார். சரி, என் மீது சத்தியம் செய்யுங்கள் என்றேன். அதுவும் முடியாது என்றார்.

சரி, இந்த உறுப்பினர்களிடம், அது பொய் பிரச்சாரம் என சொல்லுங்கள் என்றேன்.

நிச்சயமாக சொல்கிறேன். நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் சொன்னார். பின்னர் முள்ளிவாய்க்காலில் இருந்து என்னை தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மத்தியகுழு முடிவெடுத்ததாக சொன்னார். யார் மத்தியகுழு என தேடிப்பார்த்தேன். எமது மத்தியகுழு பற்றிய திட்டவட்டமான வரையறையில்லை. கட்சிக்கு மத்தியகுழு ஆலோசனை சபை அவசியம், இரண்டு சபைகளின் அனுமதியுடன்தான் முடிவெடுக்க வேண்டும் என்றேன். அது கணக்கிலெடுக்கப்படவில்லை. யாருடைய ஆலோசனையுமில்லாமல், நாங்கள் ஒருவர் அல்லது இருவர் எடுக்கும் முடிவுகளின் பின்னால் இழுபட்டு வாருங்கள் என யாராவது ஒருவர் அல்லது இருவர் நினைத்தால் அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நாம் பலியிட முடியாது. அதற்கு வேறு அமைப்புக்கள் உள்ளன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸை இதற்கு பயன்படுத்தி கொள்ளட்டும்.

மத்தியகுழுவில் 5 மாவட்ட அமைப்பாளர்கள், பொருளாளர் கலந்து கொள்ளவில்லையே, எது மத்தியகுழு என ஒரு பதில் அனுப்பினேன். நாம் சொல்வதற்கு தலையாட்டுபவர்கள் மத்தியகுழுவில் தேவையில்லை. மக்கள் நலனினடிப்படையில் சிந்திக்க தெரிந்தவர்களே மத்தியகுழுவிற்கு தேவை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கூடியது. முதல் கூடிய மத்தியகுழு வேறு. ஞாயிற்றுக்கிழமை கூடிய மத்தியகுழு வேறு.

பதவி ஆசை இருப்பவர்கள் என்னிடம் பதவியை கேட்டால் நான் விட்டுக் கொடுப்பேன். ஆனால் எதேச்சதிகாரமாக பதவியை பறிக்க முயல்வதால் அதற்கு இடம்கொடுக்காமல் தொடர்ந்து போராடுவேன். எனக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட முடியாத நான் எப்படி இனத்திற்கு எதிரான அநீதிக்காக போராட முடியும். அதனால்தான் போராடுகிறேன்.

கட்சிக்குள் என்ன நடக்கிறது என உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கப்படுவதில்லை. மத்தியகுழுவின் முடிவு, பின்னால் வாருங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

கட்சியின் பொதுச்சபையை கூட்டுவது குறித்து ஆராய்கிறேன். நடந்த விடயங்களை பொதுச்சபைக்கு முன்வைப்பேன். அவர்கள் என்னில் குற்றமுள்ளது, விலகும்படி கூறினால் விலகி விடுவேன். இன்றைய நிலையில் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து செயற்பட முடியாத நிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள். இன்னொரு பெயரை வைத்து கட்சியை உருவாக்க அதிக நாள் செல்லாது. இது அல்ல எமது நோக்கம்.

தமிழ் தேசியவாதம் சிதைக்கப்பட்டு வருகிறது. 2020 தேர்தல் தமிழ் தேசியவாதத்திற்கு தோல்வி. மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில், அம்பாறையில் கோட்டா தரப்பினரே அதிக வாக்கு பெற்றனர். தமிழ் தேசிய தரப்புக்கள் பிளவடைந்திருந்தது, சரியாக செயற்படாமைதான் தோல்விக்கு காரணம். இந்த நிலையில் முன்னணியை உடைப்பது எனது நோக்கமல்ல.

இந்த கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்கிறார்கள். 2018ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தவர்கள்தான்- உள்ளூராட்சி தேர்தலில் கட்சி வெற்றியடைந்து விட்டதென நினைத்து வந்தவர்கள்தான்- இப்படியான செயற்பாடுகளிற்கு துணை போகிறார்கள்.

எதிர்காலத்தில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்று திரட்டி, தமிழ் தேசிய வாதத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் நடவடிக்கையை நான் முன்னெடுக்கப் போகிறேன். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

கட்சியை விட்டு நீக்குவதாக அனுப்பப்பட்ட கடிதத்தை நான் ஏற்கவில்லை. விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின் நடவடிக்கையெடுத்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன். விசாரணையே நடத்தாமல் நடவடிக்கையெடுத்ததால் அதை ஏற்க மாட்டேன்.

இலட்சியத்திற்காக செயற்படுவதாக கூறிக்கொண்டு, பதவிக்காக சூழ்சி செய்யும் அமைப்பாக இதை வைத்திருக்க முடியாது.

முன்னணியின் ஒழுக்க சரத்துக்களை மீறியதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த கோவை எப்பொழுது, எப்படி வந்தது என தெரியாது. நான்தான் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்தேன். ஒரு ஒழுக்கக்கோவையை நான்தான் தயாரித்து உறுப்பினர்களிற்கு அனுப்பினேன். எனக்கு எதிரான விசாரணைக்காக அவசரமாக அவர்களே ஒரு ஒழுக்கக்கோவையை தயாரித்துள்ளனர். ஏற்கனவே இருந்த ஒழுக்கக் கோவைக்கும், இப்பொழுது அனுப்பிய ஒழுக்கக் கோவைக்குமிடையில் வித்தியாமமுள்ளது.

யாரிடமும் நான் நிதி வாங்கி மோசடி செய்யவில்லை. அந்த தேவை எனக்கில்லை. நான்தான் இலட்சக்கணக்கான பணத்தை கட்சிக்கு வழங்கியுள்ளேன். 2018 தேர்தல் முடிந்ததும், கட்சிக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியை நான்தான் அடைத்தேன். தலைவர், செயலாளர் கையை விரித்து விட்டார்கள். அந்த பணம் எனக்கு மீளளிக்கப்படவேயில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here