தொடர்ந்து இணைந்து செயற்படுவதை ஆராய ஒரு வாரத்தில் ஒன்றுகூடுகிறார்கள் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள்!

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று (30) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி ஜனநாயக வழியிலான போராட்டங்களை நடத்தி முடித்துள்ள பின்னணியில் இன்று மாலை 5 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், சி.சிறிதரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், ரெலோ சார்பில் விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்ததாலேயே மக்கள் கதவடைப்பு அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள், இந்த ஒற்றுமையை மேலும் வளர்ப்பது பற்றி ஆராய வேண்டும் என கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தடைகளை தாண்டி உண்ணாவிரத போராட்டம், கதவடைப்பு போராட்டங்களை நடத்தியிருந்தாலும், அதன் இலக்கை இன்னும் எட்டவில்லை. எதிர்காலத்தில் அன்னை பூபதி நினைவுதினம், மாவீரர் தினம் போன்றவற்றை அரசு தடைசெய்யும். அவற்றையும் எதிர்கொள்ளும் விதமாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அரசியலமைப்பு, ஜெனீவா விவகாரம், தொல்லியல்துறையின் கெடுபிடிகள் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து செயற்படலாமா என்பதை ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதற்காக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் ஒரு வாரத்திற்குள் கலந்துரையாடல் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடல்களிற்கு கட்டாயம் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. செல்வம் அடைக்கலநாதன், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இதுவரை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, சிறிய சிறிய விடயங்களில் ஒன்றித்து செயற்படுவதில் அதிக சிக்கல்கள் இருக்காது, கட்சிகளாக ஒன்றித்து செயற்படுவதில் நிறைய சிக்கல்கள் இருப்பதையும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏனெனில், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனேக கட்சிகள், பிரமுகர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அதிருப்தியடைந்து வெளியேறியவர்கள். அவர்கள் அதிருப்தியடைந்து வெளியேறிய காரணிகள் அப்படியே நீடித்து வரும் நிலையில், வலுவான கூட்டணியாக எப்படி இணைந்து செயற்படுவதென மாவை சேனாதிராசாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

“ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படலாமா என ஆராய தலைவர்கள் கூடுவதென தீர்மானிக்கிறீர்கள். நல்ல விடயம். ஆனால் நாம் இங்கு ஆராய்ந்து கொண்டிருக்க, சுமந்திரன் அண்மையிலும் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் ஜெனீவாவ விவகாரத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து வருவதாக. அனைத்து கட்சிகளின் சார்பில்தான் சுமந்திரன் பேசுகிறார் என்று கூட வெளிநாட்டு தூதர்கள் கருதக்கூடும். முதலில் தமிழ் அரசு கட்சி தமக்குள் உள்ள பிரச்சனைகளை, கோஷ்டி செயற்பாடுகளை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here