மாவை அதிரடி: துரைராசசிங்கத்தின் ‘காற்று பிடுங்கப்பட்டது’; மட்டக்களப்பு சிறப்பு பொறுப்பு அதிகாரியாக பொ.செல்வராசா!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்ப பொறுப்பு அதிகாரியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த துணைத்தலைவருமான பொன்.செல்வராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக இதுவரை பதவிவகித்து வந்த கி.துரைராசசிங்கம் இதுவரை கிழக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். கிழக்கு விவகாரங்களை கவனிக்கும்படி துரைராசசிங்கம் பொறுப்பளிக்கப்பட்டிருந்த போதும், அவர் எதையும் கவனிக்காமல் இருந்ததால் கட்சி கிழக்கில் சீர்குலைந்துள்ளது.

கட்சியின் கிழக்கு கட்டமைப்பு குறித்து கட்சி உறுப்பினர்களிற்கிடையிலேயே அதிருப்தியும், அவநம்பிக்கையும் நிலவி வந்தது. கிழக்கில் கட்சியை வலுப்படுத்தாமல், தனக்கு ஒரு அணி சேர்க்கவே துரைராசசிங்கம் முயற்சித்து வந்தார்.

அவரை பதவிநீக்க வேண்டுமென கட்சியின் மத்தியகுழுவில் போர்க்கொடி தூக்கப்பட்ட போது, சாணக்கியன் தவிர்ந்த வேறு எந்த கிழக்கு உறுப்பினர்களும் ஆதரவளிக்கவில்லை. சாணக்கியன் மத்தியகுழு உறுப்பினரும் அல்ல. ஆனால் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் துரைராசசிங்கத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் அகற்றிய கையுடன், கிழக்கு கட்டமைப்பை மீளுருவாக்க கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளார்.

இதன்படி, சில தினங்களின் முன்னர் பொ.செல்வராசாவிற்கு, மாவை சேனாதிராசா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “கட்சி யாப்பின் 13(அ)வின்படி எனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினடிப்படையில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்பு பொறுப்பு அதிகாரியாக உங்களை நியமிக்கிறேன். அம்பாறை விடயங்களையும் உங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளும்படி பணித்துள்ளேன்“ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here