எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் நேரடி மோதல்: அ.தி.மு.க. செயற்குழுவில் கடும் வாக்குவாதம்

அ.தி.மு.க. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் வாக்குவாதமும், நேரடி மோதலும் ஏற்பட்டது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழக்கமாக தீர்மானங்களையொட்டிதான் கலந்துகொண்டவர்கள் வரவேற்று பேசுவது வழக்கம். அதன்படி நேற்று கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன், ஒருங்கிணைப்பாளரான துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டும் பேசுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திடீரென்று எழுந்து ஒரு அதிர்ச்சியை கொடுத்தார். “வெளியே தொண்டர்கள், மக்கள் எல்லாம் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றே, இப்போதே முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்” என்று கிரிக்கெட் விளையாட்டில் தொடக்க ஆட்டக்காரர் போல் இந்த விவகாரத்தை தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி பேசும்போது, “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார். நீங்கள் 2 பேரும் சேர்ந்து முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று இப்போதே அறிவிக்க வேண்டும். 11 பேர் கொண்ட குழு என்றால் அது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். சரியாக இருக் காது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தரப்பினரின் அன்பை பெற்று நல்ல வகையில் ஆட்சி செய்து வருகிறார். அவர் தான் முதல்- அமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது. எனவே இப்போதே, இந்த கூட்டத்திலேயே முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதே கருத்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விசுவநாதன், அன்வர் ராஜா, வளர்மதி ஆகியோரும் வலியுறுத்தி பேசினார்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, “ஜெயலலிதா இறந்த சூழ்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக இருக்கட்டும் என்று சொன்னவர் சசிகலா. ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு இந்த ஆட்சி நிலைக்குமா? என்ற சூழ்நிலை வந்தபோதும், தி.மு.க. ஆட்சியை கலைக்க எவ்வளவோ முயற்சி எடுத்த நேரத்திலும், ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. 3 மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும், 6 மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும் என்று தி.மு.க. காலம் கணித்த நேரத்தில், மூன்றரை ஆண்டு காலம் எவ்வளவோ கஷ்டங்கள், சோதனைகளுக்கு இடையே ஆட்சியை மிகத் திறம்பட நடத்தி மக்கள் மனதில் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அரசுக்குத்தான் அடுத்தாற் போல் ஆட்சிக்கு வர தகுதி இருக்கிறது என்று எதிர்பார்ப்பு இருக்கும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறார். எல்லா மக்களும் விரும்புகிற வகையில் திட்டங்களை தீட்டி மிக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவரையே உடனடியாக முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசும்போது, “இதுவரையில் விவசாயிகளில் இருந்து யாரும் முதல்-அமைச்சராக வந்தது இல்லை. முதல் முறையாக ஒரு விவசாயி முதல்-அமைச்சராகி இருக்கிறார். விவசாயிகளின் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விவசாயிகள் எல்லாம் இவரே தொடர்ந்து முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் ரேஷன் கார்டுகளுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கி வருகிறார். கொரோனா பரவல் அதிகம் இருக்கும் சூழ்நிலையிலும் அது குறித்து கவலைப்படாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுகளை நடத்தி வருகிறார். மத்திய அரசு பாராட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகிறார். இவர்தான் தொடர்ந்து முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்று விவசாயிகளும், மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே இவரை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பண்ரூட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர் கூறுகையில், “ஏற்கனவே பொதுக்குழுவில் தீர்மானித்தபடி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைத்து முடிவு எடுக்க சொல்லலாம். அந்த வழிகாட்டு குழு ஒரு ‘ஷாக் அப்சார்பர்’ அதாவது அதிர்வு தாங்கியாக செயல்படும். இங்கே முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து ஒருதலைப்பட்சமாக கருத்துகளை தெரிவித்தார்கள். 1980-ல் தி.மு.க.வில் இது போன்ற பிரச்சினைகள் எழுந்த போது கருணாநிதியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்ததால் என்ன ஆனது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.

இந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்து பலத்த கூக்குரல் கிளம்பியது. முதலில் நான் பேசுவதை கேளுங்கள் என்று சொல்லி பண்ருட்டி ராமச்சந்திரன், தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்தார்.

இதற்கிடையே கூட்டத்தில் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் பேசுகையில், “ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர். ஜெயலலிதாவுக்கு சோதனைகள் வந்த நேரத்தில் அவரைத்தான் முதல்-அமைச்சர் ஆக்கினார். நீங்கள் இருவரும் இரட்டை இலைகள். இரு பொக்கிஷங்கள். ஓ.பன்னீர்செல்வம் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’. எடப்பாடி பழனிசாமி ‘குடிமராமத்து பணிகளின் நாயகன்’. நீங்கள் இருவரும் தொண்டர்களுக்காகவும், கட்சிக்காகவும் தியாகங்கள் செய்ய வேண்டும். கட்சிக்காகவும், தொண்டர்கள் நலனுக்காகவும் ‘இரட்டை இலை’ வெற்றி பெற இருவரும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுத்து அறிவித்தால்தான் கட்சி காப்பாற்றப்படும்” என்றார்.

தொடர்ந்து செம்மலை எழுந்து, ‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சிறப்பை எடுத்து கூறி, அவரே முதல்- அமைச்சராக தொடர வேண்டும்’ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தான் கட்சிக்காக செய்த தியாகங்கள், கீழ்மட்டத்தில் இருந்து எப்படி தனது கடுமையான உழைப்பினால் ஒவ்வொரு பதவியாக உயர்வு நிலையை அடைந்து முதல்- அமைச்சராக வந்தது பற்றி விளக்கினார்.

“எந்த நேரத்திலும், எந்த பதவியையும் நான் போய் கேட்டு பெறவில்லை. எனக்கு எல்லா பதவிகளையும் ஜெயலலிதாவே என்னை அடையாளம் கண்டு கொடுத்தார். தற்போது பல களங்களில் இருந்து எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இன்றே முடிவு செய்து அறிவிக்கவில்லை என்றால் அது எதிரிக்கு உறுதுணையாக போய்விடும்” என்று தெரிவித்தார்.

மேலும் முதல்-அமைச்சர் பேசும்போது, “நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) சட்டசபைக்கு வந்து இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே, அப்படி ஆட்சி கவிழ்ந்து இருந்தால் இந்த கட்சியும், ஆட்சியும் என்ன ஆயிருக்கும்?” என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், “நான் சட்டசபைக்கு வந்து எதிர்த்து வாக்களித்தபோது, கட்சியும், ஆட்சியும் அந்த குடும்பத்தின் பிடிக்குள் சிக்கி இருந்தது. அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் தர்மயுத்தம் நடத்தினேன். எனவே அந்த குடும்பத்தின் பிடிக்குள் சிக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் எதிர்த்து வாக்களித்தேன். ஆனால் அடுத்த 15 நாட்களில், ‘நீங்கள் அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து வெளியே வந்துவிட்டீர்கள்’ என்று நம்பகமான தகவல் வந்தபோது, தர்மயுத்தத்தை கைவிட்டுவிட்டு உங்களுடன் வந்து இணைந்தேனா, இல்லையா? நான் இணைந்தது இந்த கட்சியை, ஆட்சியை காப்பாற்றுவதற்குத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக தி.மு.க. தீர்மானம் கொண்டு வந்த போது என்னோடு இருந்த 18 எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்து வாக்களித்ததால் தானே 5 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. ஆட்சி நிலைத்தது. அதற்கும் நான்தானே காரணம். இதை ஏன் மறந்துவிட்டீர்கள்?” என்று கேட்டார்.

இந்த வாதம் முடிந்தவுடன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் பேசுவதற்கு எழுந்தார். அப்போது எதிர்ப்பு குரல் கிளம்பியது. உடனே அவர் பேசுகையில், “முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பது இயல்பாக நடக்க வேண்டும். ஆனால் இன்றே, இப்போதே அறிவிக்க வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு வாதாடுவது சரியில்லை. இப்படி நிர்ப்பந்தத்தின் பெயரில் அது நடக்கவே கூடாது. எதிர்காலத்தில் இதே போன்று செயற்குழுவில் உங்களில் ஒருவரை நீக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? எனவே தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்து விடக்கூடாது. ஒரு நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனவே அடுத்த முதல்-அமைச்சர் யார் என்பதை நீங்கள் 2 பேரும் அமைதியாக பேசி முடிவு எடுக்க வேண்டும். இப்படி நிர்ப்பந்தத்துக்கு ஆட்படுத்தக்கூடாது” என்று தனது கருத்துகளை தெரிவித்தார்.

இந்த நேரம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நான் தர்ம யுத்தம் நடத்தி ஒரு குடும்பத்தின் பிடிக்குள் இந்த ஆட்சி போய் விடக்கூடாது என்று போராடினேன். நான் கட்சியில் இணையும்போது எத்தனை வாக்குறுதிகள் எனக்கு அளிக்கப்பட்டன என்பதை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த வாக்குறுதிகள் ஒன்றும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. நான் அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று போராடினேன். உங்களைப் போல சசிகலாவால் முதல்-அமைச்சராக நியமிக்கப்படவில்லை” என்றார்.

இந்த நேரம் முதல்-அமைச்சர் ஆவேசமாக எழுந்து, “என்னை சசிகலா முதல்- அமைச்சர் ஆக்கினார் என்றால், உங்களையும் அப்பல்லோ மருத்துவமனையில் முதல்-அமைச்சர் ஆக்கியது சசிகலா தானே” என்றார்.

இதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “அந்த நேரம் ஜெயலலிதா உயிரோடு இல்லை. நான் எனக்கு பதவி வேண்டாம் என்றுதான் கூறினேன். என்னை நிர்ப்பந்தப்படுத்தித்தான் அறிவித்தார்கள். நான் ஒருமுறையாவது முதல்-அமைச்சராக வேண்டும் என்று கேட்டு இருப்பேனா? பதவி வேண்டும் என்று ஒருவரிடமாவது கூறி இருப்பேனா?. நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டவன் இல்லை. நாங்கள் இணையும் போது நடந்தபேச்சுவார்த்தையில் என்னை துணை முதல்- அமைச்சராக இருங்கள் என்று சொன்ன போது கூட, துணை முதல்-அமைச்சர் பதவியே வேண்டாம் என்று சொன்னவன் நான். கட்சி பதவியே போதும் என்று நினைத்தவன் நான். அந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நன்மைக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் இந்த பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னதாலும், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் வற்புறுத்தியதாலும்தான் இந்த பதவியை நான் ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

அதன் பின்னர் கூட்டம் அமைதியுடன் முடிந்தது.

கூட்டம் முடிந்தவுடன் அனைவரும் ஒரு அறையில் அமர்ந்து பேசினார்கள்.

அப்போது எல்லோருமே, இந்த பிரச்சினை தீர வேண்டும் என்றால் நீங்கள் 2 பேரும் கூடி பேசி முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யுங்கள். வருகிற 7-ந் தேதி அந்த முடிவை 2 பேரும் சேர்ந்து அறிவியுங்கள் என்று வலியுறுத்தவே,

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து அப்படியே முடிவு எடுக்கப்பட்டு வெளியே அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here