யாழில் பிரபல ரௌடியை விரட்டிவிரட்டி வெட்டிய 4 பேருக்கு விளக்கமறியல்!

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் என்று பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி – பெருமாள் கோவிலடியில் வைத்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற பிரபல ரௌடி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கார் ஒன்றில் வந்த மர்ம ரௌடிகள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற ரௌடி தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தனுரொக் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்குவிலைச் சேர்ந்த மோகன் அசோக் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அத்தோடு மேலும் மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், காரின் உரிமையாளரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை விடுவித்துள்ளனர். அவரிடமிருந்து வாடகைக்கு காரை பெற்று சென்று, தாக்குதல் நடத்தினர்.

சந்தேக நபர்களில் மோகன் அசோக், நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

கொலை முயற்சி என அவர் மீது குற்றஞ்சாட்டி பொலிஸார் பி அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேக நபரை வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அத்துடன், மேலும் 3 சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரையும் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here