கதவடைப்பிற்கு எதிராக பிள்ளையான் குழு உறுப்பினர்கள் போராட்டம்!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஹர்த்தாலிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கோரளைப்பற்று பிரதேச மக்கள் என தம்மை அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டாலும், அவர்கள் யாரும் அந்த பகுதி மக்கள் அல்ல. அவர்கள் முன்னர் துணைக்குழுவாக செயற்பட்ட பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் என வாழைச்சேனை பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

போராட்டம் என்ற பெயரில் அங்கு களமிறக்கப்பட்டவர்கள்,

வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, நாம் ஹர்த்தாலை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களின் உரிமை மறுப்பு மற்றும் நினைவேந்தல்களுக்கான தடை ஆகியவற்றை கண்டித்து தமிழ் கட்சிகளினால் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் பகுதிகளில் பூரண கதவடைப்பு இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பூரண ஹர்த்தால் எதிர்ப்பு போராட்டத்தில் பிள்ளையான் குழுவின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கமும் கலந்து கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here