வடக்கு, கிழக்கு முடங்கியது: அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய துறைகள் முடங்கின! (PHOTOS)

அரசின் ஜனநாயக விரோத- தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் இராணுவ பாணி ஆட்சி அணுகுமுறைக்கு எதிராக வடக்கு கிழக்கில் இன்று பூரண கதவடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

வடக்கு கிழக்கில் முழுமையாக கல்வி செயற்பாடுகள் முடங்கியுள்ளது. பாடசாலைகளில் குறைந்தளவான மாணவர்கள் வரவு ஆங்காங்கு பதிவாகியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கவில்லை. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி இராணுவத்தினர் மிரட்டல் பாணி அறிவித்தல் விடுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக சாவகச்சேரி பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி இராணுவத்தினர் வற்புறுத்தி வருகிறார்கள். இன்று தாம் கண்காட்சியொன்றை நடத்தவுள்ளதாகவும், அதனால் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள். எனினும், வர்த்தகர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

யாழில் தனியார் போக்குவரத்து துறையில் அரச சார்பு தரப்பினர் மட்டும் மிகச் சிறியளவில் போக்குவரத்தில் ஈடுபடுகிறார்கள்.

வவுனியா 

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந் நிலையில் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

இதே வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன் பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை வவுனியாவில் முற்சக்கரவண்டிகள் சில சேவையில் ஈடுபட்டதுடன் பாடசாலைக்கும் குறைந்தளவான மாணவர்கள் வருகைதந்திருந்தனர்

இந் நிலையில் அரச திணைக்களங்கள் உணவகங்கள் வழமைபோல் செயற்பட்டது.

யாழ்ப்பாணம்

ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இன்றைய தினம் ஹர்த்தாலினாள் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

நேற்றைய தினத்தில் இன்றைய ஹர்தாலுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்ற போதும், தமிழ் மக்கள் ஹர்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here