வடக்கு, கிழக்கில் நாளை முழுமையான கதவடைப்பு: எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு!

எமது அரசியல் செயற்பாட்டிற்கு அரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருப்பதனால் வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜயாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இன்று (27) செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்,

அரசாங்கமானது எமது அரசியல் எதிர்ப்பினை அடக்குவதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தடைகள் முட்டுக்கட்டைகள் நீக்குவதற்காகவே வட கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பதற்கு கோரப்பட்டுள்ளது. முழுமையாக ஹர்த்தாலை அனுஸ்டிப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

இதேவேளை கடந்த காலங்களில் 19 வது சீர்த்திருத்த சட்டத்தில் குறைகள் இருந்ததை நாம் அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கும் தயாராக இருந்தோம். ஆனால் இச்சட்டத்தை முழுமையாக இல்லாமல் பண்ணுவது என்பது பழைய நிலைக்கு செல்வது போன்றதாகும். அதாவது 18 வது சீர்திருத்தத்திற்கு மீண்டும் செல்வது என்பது ஜனநாயக விரோத செயற்பாடாகும். அதனால் தான் புதிய 20வது சீர்திருத்த சட்டத்தை எதிர்க்கவுள்ளோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here