யாழ்ப்பாண வர்த்தகர்களுடன் பொலிசார் அவசர கலந்துரையாடல்: பேசியது என்ன தெரியுமா?

யாழ் நகர வர்த்தகர்களுடன் யாழ்ப்பாண பொலிசார் இன்று காலை கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

யாழ் நகரத்தில் இன்று காலை திறக்கப்பட்டிருந்த உணவகங்கள், மரு்தகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களிற்கு சென்ற பொலிசார், வர்த்தக நிலைய உரிமையாளர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கலந்துரையாடலிற்காக அழைத்திருந்தனர்.

காலை 11 மணிக்கு கலந்துரையாடல் என அவர்கள் அழைக்கப்பட்டனர்.

பொலிஸ் நிலையம் சென்ற வர்த்தகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று பெருமாள் கோயிலடியில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, அது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார்.

சுமார் 10 நிமிடம் அளவிலேயே சந்திப்பு நடந்தது.

இதேவேளை, வர்த்தகர்களை பொலிசார் கலந்துரையாடலிற்கு அழைத்ததையடுத்த, நாளைய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்க கூடாதென அறிவுறுத்தவே அழைக்கப்படுவதாக வர்த்தகர்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் எழுந்தது.

இதையடுத்து, பொலிசார் அப்படியொரு அழைப்பை விடுத்தால், என்ன பதிலளிப்பதென வர்த்தகர்கள் தரப்பில் முன்னேற்பாடு செய்யப்பட்டதாகவும் அறிய வருகிறது.

எனினும், பொலிசார் அது குறித்து பேசவில்லை.

ஒருவேளை, கதவடைப்பிற்கு ஆதரவளிக்க கூடாதென பொலிசார் கோரினால்- “இந்த போராட்டம்  எமது மக்கள் பிரதிநிதிகள், நாம் ஆதரிக்கும் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. நாம் மக்கள் பிரதிநிதிகள் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறோம். இது தொடர்பாக நீங்கள் பேசுவதெனில் எமது மக்கள் பிரதிநிதிகளுடன்தான் நீங்கள் பேச வேண்டும்“ என பதிலளிக்கும் ஏற்பாட்டுடன் வர்த்தகர்கள் சென்றதாக தெரிகிறது.

எனினும், அவ்வாறான சூழல் எழவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here