‘என் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே’: பாடகர் ஜேசுதாஸ் உருக்கம்

என் சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லையே என்று பின்னணி பாடகர் ஜேசுதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய உடன்பிறப்பு போன்றவர். பாலு என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, ஒரு அம்மா வயிற்றில் பிறந்தவர்கள் போல நான் உணர்வேன். நாங்கள் இருவரும் கூடப்பிறந்தவர்கள் போல பழகினோம். முன் ஜென்மத்தில் இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய சங்கீத ஞானம் பெரியளவில் இருக்கும். பாட்டுப்பாடவும் செய்வார், உருவாக்கமும் செய்வார்.

சங்கராபரணம் படத்தில் முறையாக சங்கீதம் கற்றவர்களுக்கு இணையாக பாடியிருப்பார். அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை என்று கூறமாட்டார்கள். 2 பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

சிகரம் படத்தில் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு…’, என்ற பாடலை பாடியபோது எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிக பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. யாரையும் அவர் புண்படுத்த மாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார். கடைசியாக நாங்கள் இருவரும் பாடியது ஒரு சிங்கப்பூர் நிகழ்ச்சியில் தான். பாலு நோய் குணமாகி எப்போது வீடு திரும்புவார்? என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி கிடைக்கவில்லை.

என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒருபக்கம் வருத்தம் இருந்தது. அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.

இவ்வாறு ஜேசுதாஸ் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here